சிரியாவுக்கு தடுப்பூசி: இந்தியா கோரிக்கை

தினமலர்  தினமலர்
சிரியாவுக்கு தடுப்பூசி: இந்தியா கோரிக்கைநியூயார்க்: சிரியாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில், ஐ.நா., உடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக, இந்தியா தெரிவித்துள்ளது. மேற்காசியாவைச் சேர்ந்த சிரியா, உள்நாட்டு போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா.,வில், இந்தியாவின் துணை துாதர் கே.நாகராஜ் பேசியதாவது:

கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல், கடுமையான குளிர், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை போன்றவற்றால், 62 லட்சம் புலம் பெயர்ந்தோர் உட்பட, 1.70 கோடி மக்கள் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியா, சிரியாவுக்கு, மனிதாபிமான அடிப்படையில், 100 கோடி ரூபாய் வழங்கியது. கொரோனா சிகிச்சைக்கு, 10 டன் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இம்மாத துவக்கத்தில், 2,000 டன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இக்கட்டான நிலையில் உள்ள சிரியா மக்களுக்கு, இந்தியா தொடர்ந்து உதவும். அவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி மருந்து சீராக கிடைக்க வேண்டும். அதற்கு, ஐ.நா., உடன் இணைந்து செயல்பட, இந்தியா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை