பந்து தி.மு.க.,விடம் உள்ளது: காங்., தலைவர் அழகிரி கறார்

தினமலர்  தினமலர்
பந்து தி.மு.க.,விடம் உள்ளது: காங்., தலைவர் அழகிரி கறார்

கடலுார்: ''பந்து, தி.மு.க.,விடம் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறினார்.
கடலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து, இரண்டு முறை பேச்சு நடந்துள்ளது. பந்து, தி.மு.க.,விடம் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டணி என்பது, தேர்தல் நேரத்தில் வரும், பின் மறைந்து விடும். ஆனால், இந்தியாவிலேயே இரு அரசியல் கட்சிகள், 15 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருப்பது, தி.மு.க., - காங்., மட்டுமே. கொள்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி என்பதால் நீடிக்கிறது.
எத்தனை தொகுதிகள் கூட்டணியில் கிடைக்கிறது என்பது, எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் எவ்வாறு இணைந்து செயல்படுகிறோம் என்பதே முக்கியம். சிறப்பான இக்கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராவது உறுதி.
பா.ஜ.,வை வீழத்துவதுதான் எங்கள் கூட்டணியின் கொள்கை. பா.ஜ.,விடம் இருந்து நாட்டை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்தலில் போட்டி இல்லை அழகிரி திட்டவட்டம்



தமிழக காங்., தலைவர் அழகிரி, கடலுார் லோக்சபா தொகுதி எம்.பி., சிதம்பரம் எம்.எல்.ஏ., என, பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே, லோக்சபா தேர்தல் வந்தது.
அப்போது, அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அழகிரி போட்டியிடுவார் என பேசப்பட்டது. அதற்கேற்ப சிதம்பரம், புவனகிரி, கடலுார் தொகுதியில் அழகிரி போட்டியிடக் கோரி, அவரது ஆதரவாளர்கள், கட்சி தலைமையில் விருப்ப மனு அளித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று, கடலுார் வந்த அழகிரி, ''நான் தேர்தலில் போட்டியிடவில்லை,'' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.

மூலக்கதை