அரசியலுக்கு சசிகலா முழுக்கு!

தினமலர்  தினமலர்
அரசியலுக்கு சசிகலா முழுக்கு!

சென்னை:'நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய, இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்' என, சசிகலா அதிரடியாக அறிவித்தார்.

அவரது அறிக்கை:
நான் என்றும் வணங்கும், என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி, இன்னும் நுாற்றாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன், வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம் பொது எதிரி, தீயசக்தி என, ஜெயலலிதா நமக்கு காட்டிய, தி.மு.க.,வை, ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி, தமிழகத்தில் நிலவ, தொண்டர்கள் பாடுபட வேண்டும்.என் மீது, அன்பும் அக்கறையும் காட்டிய, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும், என் உளப்பூர்வமான நன்றிகள்.

ஜெயலலிதா, உயிருடன் இருந்தபோது, எப்படி, அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பின், அப்படித் தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ அசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும், நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும், என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லா வல்லவ இறைவனிடமும், பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.இவ்வாறு, சசிகலா கூறியுள்ளார்.

பதில் தெரியவில்லை!



சசிகலா முடிவு பற்றி, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: சசிகலா அறிக்கையை பார்த்து, அதிர்ச்சி அடைந்தேன். அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார். சசிகலாவின் அறிக்கை, எனக்கு சோர்வை வரவழைக்கிறது. அரசியலில் இருந்து விலக வேண்டாம் என, அரை மணி நேரம் வலியுறுத்தினேன்; அவர் கேட்கவில்லை.இன்னொரு கட்சி, எங்களை வெளிப்படையாக, கூட்டணிக்கு அழைத்து பேச வேண்டும் என்ற, எண்ணமே கிடையாது. எங்கள் தலைமையில் கூட்டணிக்காக, பல கட்சிகளுடன் பேசி இருக்கிறோம். நல்ல முடிவு வரும் என, எதிர்பார்க்கிறோம்.

தேர்தல் நெருங்குகிறது. எங்களின் ஒரே இலக்கு, தி.மு.க.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான். அதற்கான முயற்சிகளை, நான் செய்து வருகிறேன். எங்கள் தலைமையை ஏற்று, யார் வந்தாலும், அவர்களை ஏற்க தயார். தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என நினைக்கிற, எந்த கட்சியாக இருந்தாலும், எங்கள் தலைமையின் கீழ் வந்தால், அவர்களுடன் பேசத் தயார். அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்புக்கான கேள்விக்கு, பதில் சொல்லத் தெரியவில்லை.
இவ்வாறு, தினகரன் கூறினார்.

மூலக்கதை