மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு: தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல்

தினமலர்  தினமலர்
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு: தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல்

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், கூட்டணி அமைப்பு, தொகுதிகள் பங்கீடு போன்ற விவகாரங்களில் உடன்பாடு காண முடியாமல், பெரிய கட்சிகள் போராடுகின்றன. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரத்தையும், சுறுசுறுப்புடன் துவக்கி உள்ளார்.

தமிழகத்தில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியை முடுக்கி விட்டுள்ளன. கூட்டணி பேச்சு முடியாமல், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகள் குழம்பி தவிக்கின்றன.இக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் சேர முன்வந்துள்ள கட்சிகளும், தங்களுக்கான எண்ணிக்கை தெரியாமல், அடுத்த கட்சி பேச்சுக்கு காத்திருக்கின்றன.

தேர்தல் அறிக்கை



இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கூட்டணி பேச்சை ஒருபுறம் நடத்தியபடி, பிரசாரத்தையும் துவக்கியுள்ளார். பெண்கள், இளைஞர்களுக்கான திட்டங்கள் அடங்கிய, தேர்தல் அறிக்கையையும், நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக, கமல் அளித்த பேட்டி:இல்லத்தரசி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் பெண்களுக்கான சில திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

பெண்களுக்கான ஏழு செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு வருமானம், துன்பப்படும் பெண்களுக்கான தங்குமிடம், பெண்களுக்காக மட்டுமே இயங்கும் மாவட்ட மகளிர் வங்கி, இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள் உள்ளிட்ட, ஏழு திட்டங்கள் உள்ளன. பஸ் மற்றும் ரயில் நிறுத்தத்தில், பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு, அரசு சேவையில் உள்ள ஒவ்வொரு சீருடை துறையிலும், 50 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறும்.இளைஞர்களுக்கான ஏழு திட்டத்தில், 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வசிப்பிடத்தில் இருந்து, 100 சதுர கி.மீட்டருக்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும்.

சிறப்பு வசதிகள்



முதல்முறை தொழிலாளர்களுக்கு, வட்டியில்லா, 'மின் பைக்' வழங்கப்படும். தேசிய மற்றும் மாநில அளவில், கல்வி மற்றும் திறமைக்காக, இளைஞர்கள் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும்.
வேலையை, இளைஞர்கள் தேட வேண்டாம்; தகுதிக்கு ஏற்ப வேலையும், நிவாரணமும் வழங்கப்படும். ஐந்து பேருக்கு வேலை வழங்குபவர், சிறப்பு நிதி சலுகை பெறுவார்.

விளையாட்டு மேம்பாட்டுக்கான, ஏழு திட்டத்தில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம், பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளுக்கு ஊக்குவிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், மனிதநேய சர்வதேச பார்வையாளர்கள் விளையாட்டாக, ஜல்லிக்கட்டு மாற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சில மாற்றங்கள்



கூட்டணி குறித்து பேசி வருகிறோம்; முடிவானதும் கூறுகிறேன். விருப்ப மனுக்கள், 400க்கு மேல் வந்துள்ளன. மக்கள் விரும்பும் கூட்டணியின், முதல்வர் வேட்பாளராக, என்னை முன்மொழிந்த, ச.ம.க., தலைவர் சரத்குமாருக்கு நன்றி. மாற்றத்தை விரும்பும் நல்லவர்களுடன், கூட்டணி வைப்போம். பிரசாரத்தில், போலீசார் அனுமதி, சில இடங்களில் கிடைக்காததால், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது எதற்கு என்பது, மக்களுக்கு தெரியும்.இவ்வாறு கமல் கூறினார்.

மூலக்கதை