மீண்டும் மிரட்டுமா இந்தியா * நான்காவது டெஸ்ட் துவக்கம் | மார்ச் 03, 2021

தினமலர்  தினமலர்
மீண்டும் மிரட்டுமா இந்தியா * நான்காவது டெஸ்ட் துவக்கம் | மார்ச் 03, 2021

ஆமதாபாத்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல தொடரை வெல்வது முக்கியம் என்பதால் இந்திய வீரர்கள் மீண்டும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது, கடைசி டெஸ்ட் இன்று உலகின் பெரிய ஆமதாபாத், மோடி மைதானத்தில் துவங்குகிறது.

பேட்டிங் ஏமாற்றம்

இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா (296 ரன்), அஷ்வினை (176) தவிர மற்றவர்கள் ஏமாற்றம் தருகின்றனர். துவக்கத்தில் ஒரு அரைசதம் அடித்த சுப்மன் கில் பிறகு அணியை கைவிட்டார். ரகானே, புஜாரா பெரியளவு ஸ்கோர் எடுக்கவில்லை. கேப்டன் கோஹ்லியும் இரு அரைசதம் அடித்தார், அவ்வளவு தான். அடுத்து வரும் ரிஷாப் பன்ட், கடந்த போட்டியில் ஏமாற்றினார். இம்முறை சுதாரிப்பார் என நம்பலாம்.

சுழல் நம்பிக்கை

முதல் மூன்று டெஸ்டில் சரிந்த இங்கிலாந்து அணியின் 60 விக்கெட்டுகளில் சுழலில் மட்டும் 49 விக்கெட்டுகள் கிடைத்தன. இதில் அஷ்வின் (24), அக்சர் படேல் (18) கூட்டணி மட்டும் 42 விக்கெட்டுகள் சாய்த்து மிரட்டல் ‘பார்மில்’ உள்ளது. இவர்களுடன் இன்று குல்தீப் யாதவ் இணைய காத்திக்கிறார். வேகப்பந்து வீச்சில், சொந்தமண்ணில் அசத்தும் உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் இஷாந்த் அல்லது முகமது சிராஜ் என யார் இணைவது என்பது இன்று தெரியும்.

ஜோ ரூட் பலம்

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (333 ரன்) தவிர மற்றவர்கள் வருவதும் போவதுமாக உள்ளனர். அடுத்த இடத்தில் ஸ்டோக்ஸ் (146) உள்ளார். பர்ன்ஸ், கிராலே, சிப்லே, லாரன்ஸ் பெரியளவு ரன்கள் எடுக்கவில்லை. வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்குவதும் பேட்டிங் சொதப்பலுக்கு காரணமாக உள்ளது.

பவுலிங்கை பொறுத்தவரையில் சுழல் வீரர் ஜாக் லீச் (16 ) மட்டும் ஆறுதல் தருகிறார். இவருடன் டாம் பெஸ் (1ல் 5 விக்.,) இடம் பெறுவார் என நம்பப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் ‘சீனியர்’ ஆண்டர்சனுடன், ஸ்டோன் இடம் பெற வாய்ப்புள்ளது. இதனால் ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் இடம் பெறுவது சிரமம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்திய அணி தொடரை 2–1 அல்லது 3–1 என வென்றாக வேண்டும் என்பதால் அவ்வளவு எளிதில் விட்டுத்தரமாட்டர் என்பதால் கடும் சவாலை எதிர்பார்க்கலாம்.

 

ஆடுகளம் எப்படி

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தில் லேசாக புற்கள் காணப்பட்டன. இன்று காலை இந்த புற்கள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நீக்கப்படவில்லை என்றால், ‘டாஸ்’ வென்று பேட்டிங் செய்வதா, பீல்டிங் செய்வதாக என இரு அணி கேப்டன்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். தவிர அடுத்தடுத்த நாட்களில் ஆடுகளத்தில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பேட்ஸ்மேன்கள் பாடு திண்டாட்டம் தான்.

 

பைனல் பாதை எப்படி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது.  ஜூன் 18ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள பைனலுக்கு, 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து (70%) முன்னேறியது.

* முதலிடத்தில் உள்ள இந்திய அணி (71.0%), இன்று துவங்கும் நான்காவது டெஸ்டில் குறைந்தபட்சம் ‘டிரா’ செய்தால், பைனலுக்கு செல்லலாம்.

* மாறாக தோற்றால் ஆஸ்திரேலியா (69.2%) பைனலுக்கு செல்லும்.

 

கோஹ்லி கோபம்

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘சுழல் ஆடுகளம் குறித்து மட்டும் எப்போதும் அதிகம் விமர்சிக்கின்றனர். 4 அல்லது 5வது நாளில் டெஸ்ட் முடிந்தால் அதுகுறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால் 2, 3 நாளில் முடிந்து விட்டால் அவ்வளவு தான், எல்லோரும் விமர்சிக்க துவங்குகின்றனர். நியூசிலாந்தில் 3வது நாளில், 36 ஓவர்கள் மட்டும் விளையாடி நாங்கள் தோற்றோம். ஆனால் யாரும் அந்த ஆடுகளம் குறித்து எழுதவில்லை. இந்திய வீரர்கள் எப்படி மோசமாக விளையாடினர் என்று மட்டும் விமர்சித்தனர். வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் 40–45 ஓவர்களில் ஆல் அவுட்டானால் யாரும் எதுவும் கூறமாட்டர்,’’ என்றார்.

 

17

இந்திய அணியின் கோஹ்லி, சர்வதேச அரங்கில் மூன்று வித அணிக்கு கேப்டனாக 11,983 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 17 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், கேப்டனாக 12,000 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் ஆகலாம். இதற்கு முன் பாண்டிங் (ஆஸி.,), கிரீம் ஸ்மித் (தெ.ஆப்.,) இதுபோல சாதித்தனர்.

 

59

இந்திய டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை தோனிக்கு (60) உண்டு. 59 டெஸ்டில் கேப்டனாக இருந்த கோஹ்லி, இன்று தோனி சாதனையை சமன் செய்யவுள்ளார்.

 

550

இந்தியா, இங்கிலாந்து மோதும் 4 வது டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இது இந்திய அணியின் 550 வது டெஸ்ட். இதற்கு முன் பங்கேற்ற 549 டெஸ்டில், இந்திய அணி 161ல் வெற்றி பெற்றது. 218 போட்டிகள் ‘டிரா’ ஆகின. 169ல் தோல்வி கிடைத்தது. 1 டெஸ்ட் ‘டை’ ஆனது.

 

603

சர்வதேச அரங்கில் இந்தியாவின் அஷ்வின் இதுவரை 603 விக்கெட் சாய்த்துள்ளார். நான்காவது டெஸ்டில் 8 விக்கெட் சாய்க்கும் பட்சத்தில், ஜாகிர் கானை (610) முந்தி, அதிக விக்கெட் வீழ்த்திய நான்காவது இந்திய பவுலர் ஆகலாம்.

மூலக்கதை