நாட்டின் சேவைகள் துறை பிப்ரவரியில் சிறப்பான வளர்ச்சி

தினமலர்  தினமலர்
நாட்டின் சேவைகள் துறை பிப்ரவரியில் சிறப்பான வளர்ச்சி

புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், இந்தியாவின் சேவைகள் துறையில், வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பு, மேலும் வீழ்ச்சியடைந்து உள்ளது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த செலவுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளன.‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு. ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட, சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.ஏ.ஐ.,’ எனும் குறியீடு, 55.3 புள்ளிகளாக உயர்வடைந்து உள்ளது. இது, ஜனவரியில், 52.8 புள்ளிகளாக இருந்தது.

தேவைகள் அதிகரிப்பு மற்றும் அனுகூலமான சந்தை நிலவரம் ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி, பிப்ரவரியில் எட்டப்பட்டுஉள்ளது.வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை, தயாரிப்பு துறை மற்றும் சேவைகள் துறை ஆகிய இரண்டிலுமே சரிவு ஏற்பட்டுஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை