காப்பீடு சம்பந்தமான புகார்களை இனி ஆன்லைனில் வழங்கலாம்

தினமலர்  தினமலர்
காப்பீடு சம்பந்தமான புகார்களை இனி ஆன்லைனில் வழங்கலாம்

புதுடில்லி:இனி, காப்பீட்டு பாலிசிதாரர்கள், ‘ஆன்லைன்’ மூலமாக புகார்களை வழங்க முடியும். அது மட்டுமின்றி; ஆன்லைன் மூலமாகவே, நாம் அளித்துள்ள புகார்களின் நிலையை கண்காணிக்கவும் முடியும்.

மத்திய அரசு, ‘காப்பீட்டு குறைதீர்ப்பாளர் விதி 2017’ல் மாற்றங்கள் மேற்கொண்டதை அடுத்து, இத்தகைய வசதிகள் பாலிசிதாரர்களுக்கு கிடைக்க இருக்கின்றன.இது குறித்து, நிதிஅமைச்சகம் வெளியிட்டிருக் கும் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, நிவாரணம் வழங்குவதற்கான செலவுகள் குறைக்கப்பட்டு, செயல்திறன் அதிகரிக்கப்படும்.மேலும், திருத்தப்பட்ட விதிகளின் கீழ், குறைதீர்ப்பாளர், தேவைப்படும் பட்சத்தில், காணொலி மூலமாகவும் விசாரணையை மேற்கொள்ள முடியும்.அத்துடன் காப்பீட்டு முகவர்களும், குறைதீர்ப்பாளர் வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.

அது மட்டுமின்றி, இதற்கு முன், பாலிசிதாரர்கள், ஏதாவது சச்சரவுகள் இருந்தால் மட்டுமே, குறைதீர்ப்பாளரை அணுக முடியும். இதை மாற்றி, காப்பீட்டாளர்கள், முகவர்கள், தரகர்கள் மற்றும் பிற இடைத்தரகர்களின் தரப்பில், சேவை குறைபாடுகள் இருந்தாலும், புகார் வழங்க முடியும் என்ற அளவுக்கு, விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ அறிக்கையின்படி, காப்பீட்டு பாலிசிகள் தவறாக விற்பனை செய்யப்படுவது சம்பந்தமான புகார்கள், அதிகரித்து வருகின்றன. அதே சமயம், புகார் தந்தவருக்கு சாதகமான தீர்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.இந்நிலையில், இந்த சட்ட திருத்தங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக, காப்பீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை