'மே மாதத்திற்குள் மேலும் இரண்டு தடுப்பூசிகள்'

தினமலர்  தினமலர்
மே மாதத்திற்குள் மேலும் இரண்டு தடுப்பூசிகள்

புதுடில்லி : “நம் நாட்டில், மே மாதத்திற்குள், கொரோனா வைரசுக்கு, மேலும் இரண்டு தடுப்பூசி மருந்துகள் தயாராகிவிடும்,” என, தேசிய கொரோனா பணிக்குழு தலைவர் அரோரா நேற்று தெரிவித்தார்.
நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 'சீரம் இந்தியா' நிறுவனத்தின், 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்தும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தும், மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், அடுத்த சில மாதங்களில், மேலும் இரண்டு தடுப்பூசி மருந்துகள் தயாராகிவிடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய கொரோனா பணிக்குழுவின் செயல்பாட்டு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர், டாக்டர் என்.கே. அரோரா, நேற்று கூறியதாவது:நம் நாட்டில், 30க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில தடுப்பூசிகள், இறுதிகட்டங்களில் உள்ளன.இந்நிலையில், ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி மருந்து, அடுத்த நான்கு அல்லது ஆறு மாதங்களுக்குள், நம் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

இதேபோல், குஜராதின் ஆமதாபாதைச் சேர்ந்த, 'கேடிலா ஹெல்த்கேர்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவரும், 'சைடஸ் கேடிலா' தடுப்பூசி மருந்து, மே இறுதிக்குள், நமக்கு கிடைத்துவிடும். பரிசோதனையின்போது, இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோருக்கு எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை. 15 ஆயிரம் பேரில், ஒருவருக்கு மட்டுமே, ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை