கடல்சார் துறையில் முதலீடு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

தினமலர்  தினமலர்
கடல்சார் துறையில் முதலீடு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

புதுடில்லி:''கடல்சார் துறைகளில், நீர் வழித்தடங்களை மேம்படுத்துவது, கடல் விமான சேவைகள் துவங்குவது, கடல் சார்ந்த பகுதிகளின் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

''எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய, சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய கடல்சார் மாநாட்டை, டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரம், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே உள்ள, உள்கட்டமைப்புகளை புதுப்பிப்பது, அடுத்த தலைமுறை கட்டமைப்புகளை உருவாக்குவது, பல்வேறு துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதில், இந்த அரசு, அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், குறைவான செலவில், சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து சாத்தியமாகும்.வரும், 2030க்குள், 23 நீர்வழிப் பாதைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.கடல் விமான சேவைகளுக்காக, வரும், 2023க்குள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு கடல் விமான முனையங்கள் உருவாக்கப்படும்.

இதுபோன்ற முனையங்கள், 16 இடங்களில் ஏற்படுத்தப்படும். மேலும், நாடு முழுதும் உள்ள, 189 கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள நிலப்பரப்புகளில், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் திட்டம் உள்ளது. முக்கிய துறைமுகங்களில், சூரிய சக்தி மற்றும் காற்றாலை வாயிலாக, மின்சார வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வரும், 2030க்குள், அனைத்து துறைமுகங்களிலும், புதுப்பிக்க கூடிய சக்தியின் பயன்பாட்டை, 60 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இங்கு, 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவிலான, 400 முதலீடு திட்டங்களை, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக வைத்துள்ளது. மேலும், 2030 - 35க்குள், சாகர்மாலா திட்டத்தின் கீழ், 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 574 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

துறைமுகங்களில், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கிறோம். இங்கு, மிக நீண்ட கடல் பரப்பு உள்ளது. உழைக்கும் மக்கள் உள்ளனர். எனவே, வளர்ந்து வரும் இந்திய கடல்சார் துறைகளில் முதலீடு செய்ய, சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை