உடற்தகுதி யோ-யோ சோதனையில் தோல்வி: டி.20 தொடரில் வருண் சக்ரவர்த்தி ஆடுவது சந்தேகம்...ஒருநாள் போட்டிகளிலும் பும்ராவுக்கு ஓய்வு

தினகரன்  தினகரன்
உடற்தகுதி யோயோ சோதனையில் தோல்வி: டி.20 தொடரில் வருண் சக்ரவர்த்தி ஆடுவது சந்தேகம்...ஒருநாள் போட்டிகளிலும் பும்ராவுக்கு ஓய்வு

சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 4வது மற்றும் கடைசி டெஸ்ட்  நாளை மறுநாள் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதையடுத்து 5 டி.20 போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் முறையே மார்ச் 12, 14, 16, 18 மற்றும் 20ம்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 29 வயதான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அவர் தற்போது உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், டி20 அணியில் இடம் பிடிப்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பின், இந்திய அணி உடற் தகுதித் தேர்வுக்கு (யோ யோ) அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரு வீரர் 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் அல்லது யோ யோ டெஸ்டில் 17.1 புள்ளிகள் பெற வேண்டும். வருண் சக்ரவர்த்தி இரண்டிலும் தேறவில்லை. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவது உறுதியாகவில்லை. இதனால் இவருக்கு பதிலாகமாற்று வீரர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரில் சேர்க்கப்பட்டிருந்த வருண் சக்ரவர்த்தி காயம்காரணமாக கடைசி நேரத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டி.20 தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  4வது மற்றும் கடைசி டெஸ்ட்டிலும் சொந்த காரணங்களுக்கான அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் மார்ச் 23ம்தேதி முதல் புனேவில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவருக்கு பதிலாக  வேறு வீரர் சேர்க்கப்படுவார்.

மூலக்கதை