23 அதிருப்தி தலைவர்கள் கூட்டத்தால் சலசலப்பு: காங். தலைமை குறித்து மே 2ல் இறுதி முடிவு

தினகரன்  தினகரன்
23 அதிருப்தி தலைவர்கள் கூட்டத்தால் சலசலப்பு: காங். தலைமை குறித்து மே 2ல் இறுதி முடிவு

மும்பை: காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், அக்கட்சியின் 23 அதிருப்தி தலைவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு இறுதி கட்டத்தை  எட்டியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவு வெளியாகும் மே 2ம் தேதிக்கு பிறகு, கட்சி தலைமை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்பட்டு  வருகிறது. இதில், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. சோனியா காந்தி உடல்நலக் குறைபாட்டால் தனது அரசியல்  பணிகளை குறைத்துக் கொண்ட நிலையில், கட்சிக்கு இன்னும் நிரந்த தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கும், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் 23 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. சமீபத்தில் குலாம்நபி ஆசாத் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், அதிருப்தி தலைவர்கள் ஒன்றிணைந்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்த ஆலோசித்து  இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விரைவில் நடக்க உள்ள 5 மாநில தேர்தல் தான் காங்கிரசில் காந்தி குடும்பத்தின்  எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ராகுல், பிரியங்கா தலைமையில் தேர்தல் வெற்றியை காட்ட வேண்டிய  கட்டாய சூழல் வந்துள்ளது. கருத்துக்கணிப்புகளை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் மட்டுமே திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி கேள்விக்குறிதான். இதில் கேரளா, புதுச்சேரியில் ஓரளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. கேரளாவில் பினராய் விஜயனை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க ராகுல் தீவிரமாக  போராடி வருகிறார். இதனால் மேற்கு வங்கம், அசாமை விட்டு தென் இந்தியாவில் தனது முழு கவனத்தை ராகுல் செலுத்தி வருகிறது. எப்படியும்  கேரளா, தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசை கரையேற்ற வேண்டுமென தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரியங்கா அசாமை தனது பொறுப்பில்  எடுத்துக் கொண்டுள்ளார். அங்கு கருத்துக்கணிப்பில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டாலும், முக்கிய பிராந்திய கட்சியான  போடோலாந்து மக்கள் முன்னணி, பாஜ கூட்டணியில் இருந்து பிரிந்துள்ளது. போடோலாந்து, காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பதால்  பாஜவுடன் கடும் சவாலுக்கு வழி பிறந்துள்ளது. இதை வெற்றியாக்கவே பிரியங்கா அங்கு களமிறங்கி உள்ளார். எனவே 5 மாநில தேர்தலில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாமில் மாற்றங்கள் நிகழும் பட்சத்தில், மீண்டும் கட்சியில் ராகுலின் பலம் அதிகரித்திடும்.  அதே சமயம், 5 மாநில தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் கட்சிக்கு கட்டாயம் தலைமை ஏற்க வேண்டிய  நிர்ப்பந்தமும் ஏற்படலாம் என்கின்றன கட்சி வட்டாரங்கள். இதனால், கட்சி தலைமை விவகாரத்தில் மே 2ம் தேதி இறுதி முடிவு எடுக்கும் நாளாக  அமைந்துள்ளது.

மூலக்கதை