மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜ அரசு மக்களுக்கு விரோதமான ஆட்சி நடத்தி வருகிறது: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜ அரசு மக்களுக்கு விரோதமான ஆட்சி நடத்தி வருகிறது: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

முல்பாகல்: மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்தி வரும் பாஜவினர் மக்களை துன்ப கடலில் ஆழ்த்தி வருகிறார்கள். இந்த கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆவேசமாக கூறினார்.  கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் 100 சட்டப்பேரவை தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி மாநாடுகள் நடத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 4ம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்குகிறார். முதல் கட்டமாக கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ள தொகுதிகளில் மாநாடுகள் நடத்துகிறார். பொதுவாக கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எந்த திட்டம் செயல்படுத்தினாலும் முதலில் கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா, குருடுமலையில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்வார்கள். அதன்படி பாதயாத்திரை செல்லும் டி.கே.சிவகுமார், குருடுமலை விநாயகர் கோயிலில் பூஜை செய்வதற்காக நேற்று கோலார் மாவட்டம் வந்தார். ராமசமுத்திர கிராமத்தின் அருகில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரூபாசசிதர், எஸ்.என்.நாராயணசாமி, நஞ்சேகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின் கட்சி தொண்டர்கள் பிரமாண்ட மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து மேளத்தாளத்துடன் ராமசமுத்திராவில் இருந்து கோலார் வரை திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர். பின் முல்பாகல் தாலுகாவில் இருக்கும் புகழ் பெற்ற குருடுமலை விநாயகர் கோயிலுக்கு சென்ற சிவகுமார் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். பின் முல்பாகல் நகரில் உள்ள பழமையான ஐதர்சாப் தர்காவுக்கு சென்று வழிபட்டதால், தர்கா நிர்வாகிகள் பச்சை சால்வை அணிவித்து வரவேற்றதுடன் ஆசிர்வாதம் செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ``மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பாஜவினர் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டங்களை உணராமல் உள்ளனர். இரு ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கையாலும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இரு ஆட்சியும் மக்களை பல வழிகளில் வஞ்சித்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் கர்நாடக சட்டப்பேரவையிலும் பெரும்பான்மை பலம் உள்ளது என்ற காரணத்திற்காக மக்கள், விவசாயிகள், தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி துன்பப்படுத்தி வருகிறார்கள். இந்த கொடுங்கோள் ஆட்சிக்கு மக்கள் விரைவில் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்றார். சிவகுமாருடன் மாநில காங்கிரஸ் செயல்தலைவர் ராமலிங்கரெட்டி, மேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் உடனிருந்தனர்.

மூலக்கதை