'2024-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெல்வேன்..!' டிரம்ப் உறுதி

தினமலர்  தினமலர்
2024ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெல்வேன்..! டிரம்ப் உறுதி

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவாரா அதற்கு குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி நெடுங்காலமாகவே பலர் மத்தியில் எழுந்து வருகிறது.குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் டிரம்ப் ஆற்றிய உரை தற்போது வைரலாகி வருகிறது.

ஜோ பைடனின் புதிய ஆட்சி குறித்து விமர்சித்த டிரம்ப் விஞ்ஞானத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் எதிராக ஜோ பைடன் ஆட்சி செய்து வருவதாகக் கூறினார். 2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக அவர் தனது உரையில் கூறியுள்ளது குடியரசு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான டொனால்டு டிரம்ப், 74 வயதிலும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒர்லாண்டோ பகுதியில் கன்சர்வேட்டிவ் பொலிடிகல் ஆக்ஷன் கமிட்டி மாநாட்டில் பேசிய டிரம்ப், விரைவில் குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். செனட்டர் மிட் ரானே உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் டிரம்பின் முயற்சிக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

சோசியலிச கொள்கையை வலியுறுத்தும் வகையில் தனது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் பைடன். இது தவறு என மிட் கருத்து தெரிவித்தார். அவரது ஆட்சி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது எனவும் அவர் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் தனது உரையில் எல்லை கட்டுப்பாடுகளை ஜோ பைடன் தளர்வு படுத்தியது குறித்து விமர்சித்திருந்தார். தனது ஆட்சியில் அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக யாரும் ஊடுருவாமல் இருக்க அதிக கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தற்போது அதனை ஜோ பைடன் தலைகீழாக மாற்றி உள்ளதாகவும் விமர்சித்தார்.


பல ஆண்டு காலமாக மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஊடுருவி அமெரிக்காவை பாதித்த பலருக்கு ஜோ பைடன் சிவப்பு கம்பளம் விரித்து தற்போது வரவேற்பு அளித்து வருகிறார் என டொனால்ட் டிரம்ப் சாடினார்.

வழக்கம்போல ஜோ பைடனின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பி டொனால்ட் டிரம்ப் தனது உரையை முடித்தார். 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு சாதகமாக வாக்குகள் மாற்றப்பட்டன என அவர் கூறினார். முன்னதாக டிரம்பின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் மறுப்பு மற்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை