புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப்

தினமலர்  தினமலர்
புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய கட்சி துவங்குவதில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். பைடனின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். கடந்த ஜன.,20ல் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றார். அப்போது இருந்து டிரம்ப் புதிய கட்சியை துவங்க உள்ளதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் டிரம்ப் பேசியதாவது: 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம். நாம் தொடங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்தளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை