சிறந்த போராளி ரிஷாப் பன்ட் * பரூக் இன்ஜினியர் பாராட்டு | பெப்ரவரி 28, 2021

தினமலர்  தினமலர்
சிறந்த போராளி ரிஷாப் பன்ட் * பரூக் இன்ஜினியர் பாராட்டு | பெப்ரவரி 28, 2021

புதுடில்லி: ‘‘தோனி போல ரிஷாப் பன்ட் கடினமாக பயிற்சிகளில் ஈடுபடுகிறார்,’’ என பரூக் இன்ஜினியர் தெரிவித்தார்.

இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 23. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் இவர் தான். இடையில் திடீரென சொதப்பிய பன்ட், மீண்டும் எழுச்சி பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் சிட்னியில் அசத்திய இவர், பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். 

சமீபத்தில் சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில், இரு சிறப்பான கேட்ச், இரு ‘ஸ்டெம்பிங்’ செய்து மிரட்டினார். இதனால் மீண்டும் ‘டுவென்டி–20’ ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியர் கூறியது:

ரிஷாப் பன்ட் எனது இளமைக்காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறார். தற்போது பெரியளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார். இவரிடம் தொழில்நுட்ப ரீதியில் சில குறைபாடுகள் உள்ளன என்றாலும், தோனியை போல கடுமையான போராடுகிறார். 

சர்வதேச அரங்கில் கால்பதித்த போது, சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பயிற்சிகளில் தனது தவறுகளை சரி செய்து கொள்கிறார். இவரது கண்கள் துல்லியமாக பந்தை கணிக்கின்றன. பந்து வரும் நேரத்தை இவரது உள்ளுணர்வு சரியாக தெரிவிக்கிறது. இப்படி மூன்றும் கலந்த விக்கெட் கீப்பராக, சிறந்த கிரிக்கெட் வீரராக பன்ட் திகழ்கிறார். 

கிரிக்கெட் மட்டுமன்றி இவர், எந்த விளையாட்டில் இருந்திருந்தாலும் வெற்றிகரமான வீரராக திகழ்வார். ஏனெனில் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் எந்த விளையாட்டிலும் களமிறங்கலாம். விக்கெட் கீப்பராக இருப்பவருக்கு இந்த அனைத்தும் தேவைப்படுகின்றன.  பன்ட்டிடம் இந்த அனைத்தும் உள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை