தோனியை நெருங்கும் கோஹ்லி * அதிக டெஸ்டில் கேப்டனாக... | பெப்ரவரி 28, 2021

தினமலர்  தினமலர்
தோனியை நெருங்கும் கோஹ்லி * அதிக டெஸ்டில் கேப்டனாக... | பெப்ரவரி 28, 2021

ஆமதாபாத்: இந்தியாவுக்காக அதிக டெஸ்டில் கேப்டனாக இருந்த தோனியின் சாதனையை சமன் செய்ய உள்ளார் கோஹ்லி.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி. கடந்த 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து தோனி விலக, கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு சென்றது. இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

இதில் 35 போட்டிகளில் வெற்றி பெற்றுத்தந்தார். 10 போட்டி ‘டிரா’ ஆக 14  தோல்வி கிடைத்தது. வெற்றி சதவீதம் 59.32 ஆக உள்ளது. தவிர இந்திய மண்ணில் அதிக வெற்றி பெற்றுத் தந்த டெஸ்ட் கேப்டன் வரிசையில் கோஹ்லி (22 வெற்றி), ஏற்கனவே தோனியை (21) முந்தியுள்ளார்.

அடுத்து, மார்ச் 4ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்டில் களமிறங்கும் போது, இந்திய அணிக்காக அதிக டெஸ்டில் கேப்டனாக இருந்த தோனியின் சாதனையை சமன் செய்யலாம். 60 டெஸ்டில் கேப்டனாக இருந்த தோனி, 27 வெற்றி, 15 ‘டிரா’ செய்தார். 18 ல் தோல்வி கிடைத்தது.

அடுத்தடுத்த இடங்களில் கங்குலி (49 டெஸ்ட், 21 வெற்றி, 13  தோல்வி, 15 ‘டிரா’), முகமது அசார்  (47 டெஸ்ட், 14 வெற்றி, 14  தோல்வி, 19 ‘டிரா’) உள்ளனர். தவிர, நான்காவது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறி, அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர்களில் ‘நம்பர்–1’  கேப்டன் ஆகலாம்.

மூலக்கதை