தமிழக அணி வெற்றி * விதர்பாவை வென்றது | பெப்ரவரி 28, 2021

தினமலர்  தினமலர்
தமிழக அணி வெற்றி * விதர்பாவை வென்றது | பெப்ரவரி 28, 2021

இந்துார்: விதர்பா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் உள்ளூர் முதல் தர ‘லிஸ்ட் ஏ’ விஜய் ஹசாரே கோப்பை  தொடர் நடக்கிறது. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விதர்பாவை எதிர்கொண்டது. ‘டாஸ்3’ வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. 

முகமது மூன்று

விதர்பா அணிக்கு கேப்டன் பைஸ் பசல் (2), கணேஷ் (5), ரத்தோடு (11) ஏமாற்றம் தந்தனர். சஞ்சய்  (28), அக்சய் (31) சற்று உதவினர். மற்ற வீரர்கள் பெரியளவு ஸ்கோர் எடுக்கவில்லை. முடிவில் விதர்பா அணி 41 ஓவரில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி சார்பி்ல முகமது 3, பாபா அபராஜித் 3, கவுஷிக் 3 விக்கெட் சாய்த்தனர்.

11.2 ஓவரில்...

காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க அதிக ரன்ரேட் தேவை என்பதால் தமிழக அணி, இந்த இலக்கை வேகமாக எட்டியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் (19), கவுஷிக் (15) வேகமாக ரன்கள் எடுத்தனர். ஷாருக்கான் (6) அணியை கைவிட்டார். 

இருப்பினும் 18 பந்தில் 48 ரன்கள் எடுத்த ஜெகதீசன், 14 பந்தில் 37 ரன்கள் விளாசிய முகமது வெற்றிக்கு கைகொடுத்தனர். தமிழக அணி 11.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  லீக் சுற்றில் 5 போட்டியில் 3 வெற்றி பெற்ற தமிழக அணி, ‘பி’ பிரிவில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளின் முடிவுக்கு ஏற்ப, தமிழக அணியின் காலிறுதி வாய்ப்பு தெரியவரும்.

 

பெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே டிராபி ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ரயில்வே, கர்நாடகா அணிகள் மோதின. ரயில்வே அணிக்கு பிரதாம் சிங் (129) கைகொடுக்க, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கர்நாடகா அணிக்கு கேப்டன் ரவிகுமார் சமர்த் (130*), தேவ்தத் படிக்கல் (145*) நம்பிக்கை தர, 40.3 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 285 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ‘நடப்பு சாம்பியன்’ கர்நாடகா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல், இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ சதத்தை பதிவு செய்தார். கடைசியாக ஒடிசா (152), கேரளா (126*) அணிகளுக்கு எதிராக சதமடித்திருந்தார்.

 

ஸ்ரீசாந்த் ‘4’

பெங்களூருவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் கேரளா அணி (149/1, 8.5 ஓவர்) 9 விக்கெட் வித்தியாசத்தில் பீஹார் அணியை (148/10, 40.2 ஓவர்) வீழ்த்தியது. ‘வேகத்தில்’ அசத்திய கேரள வீரர் ஸ்ரீசாந்த், 9 ஓவரில் 30 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். இதில் 2 ‘மெய்டன்’ ஓவர் அடங்கும். இத்தொடரில் இதுவரை 13 விக்கெட் (5 போட்டி) சாய்த்துள்ளார். பேட்டிங்கில் அபாரமாக ஆடிய கேரள அணியின் ராபின் உத்தப்பா, 32 பந்தில், 10 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 87 ரன் குவித்து வெற்றிக்கு உதவினார்.

 

வெங்கடேஷ் விளாசல்

இந்துாரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேச அணி (402/3, 50 ஓவர்) 105 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை (297/10, 42.3 ஓவர்) வீழ்த்தியது. அபாரமாக ஆடிய ம.பி., அணியின் வெங்கடேஷ் ஐயர், 146 பந்தில், 7 சிக்சர், 20 பவுண்டரி உட்பட 198 ரன்கள் விளாசினார். இவர், சமீபத்தில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்காக வீரர்கள் ஏலத்தில் கோல்கட்டா அணி சார்பில் ரூ. 20 லட்சத்திற்கு ஒப்பந்தமானார்.

மூலக்கதை