பிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடிக்கு செராவீக் விருது

பிரதமர் மோடிக்கு'செராவீக்' விருது

வாஷிங்டன்: 'செராவீக்' மாநாட்டில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவரான பிரதமர் மோடிக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. அமெரிக்காவில், 'செராவீக்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில், ஆற்றல் துறையை சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், உலக தலைவர்கள் என, பலரும் பங்கேற்று சிறப்புரையாற்றுவர்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மாநாடு, அடுத்த வாரம் நடைபெற உள்ளது. மார்ச், 1 முதல், 5ம் தேதி வரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, உரையாற்ற இருக்கிறார்.அதில், 'செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கு, விருது வழங்கப்படும். அதன்படி, இந்த விருது, பிரதமர் மோடிக்கு வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளது.

அந்த மாநாட்டில், பருவநிலைக்கான அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஜான் கெர்ரி, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், 'பிரேக்த்ரூ எனர்ஜி' அமைப்பின் நிறுவனருமான பில்கேட்ஸ், சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று, பேச உள்ளனர்.

இந்தியா - பாக்., அறிக்கை:அமெரிக்க எம்.பி., வரவேற்பு

வாஷிங்டன்: போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின்பற்றுவது தொடர்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பை, அமெரிக்க எம்.பி., வரவேற்றுள்ளார்.இந்திய எல்லைப் பகுதியில், அத்துமீறி தாக்குதல் நடத்துவதை, பாகிஸ்தான் ராணுவத்தினர் வாடிக்கையாக வைத்து இருந்தனர்.இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இணைந்து, கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், 'ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பகுதிகளில் அமைந்துள்ள, சர்வதேச எல்லை கோட்டிற்கு அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடந்து கொள்வோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த அறிவிப்பை, அமெரிக்க மூத்த எம்.பி.,யும், வெளியுறவு துறைக்கான நிலைகுழு தலைவருமான, கிரிகோரி மீக்ஸ் வரவேற்றுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றுவது தொடர்பாக, இருதரப்பும் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, நான் வரவேற்கிறேன். இந்த முதல் முயற்சியால், எல்லை பகுதியில் நிலவும் பதற்றம் தனியும் என நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நைஜீரியாவில்317 மாணவியர் கடத்தல்

லாகோஸ்:மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கொள்ளை கும்பல்கள், மாணவியர் உட்பட பலரை கும்பலாகக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது, சிறையில் உள்ள தங்களுடைய கும்பலைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கக் கோருவது அதிகரித்து வருகிறது.

கடந்த, 2014ல், போகோஹராம் என்ற பயங்கரவாத கும்பல், 276 பள்ளி மாணவியரைக் கடத்திச் சென்றது. அதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் மீட்கப்படவில்லை. கடந்தாண்டு டிச.,ல் 344 மாணவியர் கடத்தப்பட்டனர்; சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். கடந்த மாதத்தில், 27 மாணவியர் உட்பட, 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜாம்போரா மாநிலத்தில், ஒரு உறைவிடப் பள்ளிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்த கும்பல், 317 மாணவியரைக் கடத்திச் சென்றுள்ளது. ராணுவ முகாமுக்கு அருகில் இந்தப் பள்ளி உள்ளது. முன்னதாக பள்ளி வரும் வழியில் இருந்த சோதனைச் சாவடியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை.

மூலக்கதை