இது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ராஜகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேர்தலில், ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையமும், இதற்கு ஆதரவுதெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தான், இது குறித்து முடிவெடுக்க வேண்டுமாம். ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதில் ஒரு தொகுதியை, ராஜினாமா செய்ய வேண்டும்; அதனால், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு, மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.


அது மட்டுமின்றி, தேர்தல் பணியாற்றிய, அரசு அதிகாரிகளின் உழைப்பும், நேரமும், ஊதியமும் வீணாகிறது. எவ்வகையில் பார்த்தாலும், ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளில் போட்டியிடுவது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல்வாதிகள் செய்யும் அடாவடித்தனங்களில், இதுவும் ஒன்று. அதே போல, எம்.பி.,யாக இருப்பவர், எம்.எல்.ஏ.,வுக்காக போட்டியிட, மனு தாக்கல் செய்யலாம். இதுவும், மோசடித்தனமே! அவர், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார். திரும்பவும், அந்த லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இது, அரசியல்வாதிகளின், அப்பட்டமான சுயநலத்திற்கான வழிமுறை. குற்றப்பின்னணி உள்ளவரை, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கின்றனர். அதற்குப் பின், தேர்தலில் குற்றப்பின்னணிஉடையோர் இவ்வளவு பேர் என, பட்டியல் வெளியிடுகின்றனர். எதற்கு இந்த ஏமாற்று வேலை?


மக்கள் எதுவும் கேட்காதவரை, அரசியல்வாதிகள், அவர்களது சவுகரியத்திற்கு ஏற்றவாறு,எல்லாவற்றையும் மாற்றிக் கொள்வர். தேர்தல் நடைமுறைகளில், சில சீர்த்திருத்தங்கள்மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே, தாங்க முடியாத கடன் சுமையில் இருக்கும் மக்கள், மேலும் அவதிப்படுவர். 'கொரோனா'வால், நம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மறுதேர்தல் போன்றவற்றை நடத்தி, மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டாமே!

மூலக்கதை