ஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

தினமலர்  தினமலர்
ஜான்சன்  ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மூன்றாவதாக ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி தந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை, பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அங்கு டிசம்பர் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசிகளை 2 முறையாக செலுத்த வேண்டும். அப்போது தான் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் தடுப்பாற்றல் உருவாகும். அதற்கு மாற்றாக ஜான்சன் & ஜான்சன் ஒற்றை தடுப்பூசியை கொண்டு வந்து பரிசோதனை செய்தது.

மூன்று கட்ட பரிசோதனைகளின் மூலம் அத்தடுப்பூசி நல்ல பயனளிப்பது தெரியவந்தது. அத்தரவுகளை கடந்த சில நாட்களாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆய்வு செய்தது. மோசமான தொற்று பாதிப்பையும் குணப்படுத்துவதில் அத்தடுப்பூசி 85 சதவீதம் பயனுள்ளதாக இருக்கிறது என கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போல் இவற்றை உறை வெப்பநிலையில் பராமரிக்கத் தேவையில்லை. குளிர்சாதன வெப்பநிலையே போதுமானது. மேலும் ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டும் என்பதால் செலவு கணிசமாக குறையும். அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளும் இத்தடுப்பூசியை லட்சக்கணக்கில் ஆர்டர் செய்துள்ளன. வரும் நாட்களில் அந்நாடுகளுக்கு ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி அனுப்பப்படும்.

மூலக்கதை