ஸ்ரேயாஸ் சதம்: மும்பை வெற்றி | பெப்ரவரி 27, 2021

தினமலர்  தினமலர்
ஸ்ரேயாஸ் சதம்: மும்பை வெற்றி | பெப்ரவரி 27, 2021

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானுக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் சதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ‘லிஸ்ட் ஏ’ தொடரான விஜய் ஹசாரே டிராபி நடக்கிறது. ஜெய்ப்பூரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த மும்பை அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (38), பிரித்வி ஷா (36) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சர்பராஸ் கான் (30), சூர்யகுமார் யாதவ் (29) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (116) சதம் கடந்தார். மும்பை அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு மனேந்தர் சிங் (40), மஹிபால் (76) ஆறுதல் தந்தனர். கேப்டன் அசோக் மேனரியா (20), சல்மான் கான் (20) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, ராஜஸ்தான் அணி 42.2 ஓவரில் 250 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. மும்பை சார்பில் ஷர்துல் தாகூர் 4, தவால் குல்கர்னி 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து மும்பை அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது.

 

தவான் ‘153’

ஜெய்ப்பூரில் நடந்த மற்றொரு ‘டி’ பிரிவு லீக் போட்டியில் டில்லி, மஹாராஷ்டிரா அணிகள் மோதின. மஹாராஷ்டிரா அணிக்கு கேதர் ஜாதவ் (86), அஸிம் காசி (91) கைகொடுக்க 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 328 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷிகர் தவான் (153) நம்பிக்கை தர, 49.2 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை