உழைப்பை மறவா உன்னத வளைகரங்கள்! ஓட்டுக்களை அள்ள துடிக்கும் அரசியல் கட்சிகள்

தினமலர்  தினமலர்
உழைப்பை மறவா உன்னத வளைகரங்கள்! ஓட்டுக்களை அள்ள துடிக்கும் அரசியல் கட்சிகள்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே, அரசியல் கட்சிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் ஓட்டுகளை அள்ளுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, இக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட நுண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசை வார்த்தையை கட்சிகள் எழுப்புகின்றன.
இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், மகளிர் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி கோரிக்கைக்கான ஆதரவான குரல்களும் எழுகின்றன.உழைத்த வளைகரங்கள்தொழில் மாநகராக விளங்கும் திருப்பூரில், மகளிர் குழுக்கள் அதிகம். ஊரடங்கு காலத்தில், முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை தயாரித்து அசத்தின. ஊரடங்கிலும், உழைப்பை மறவாத வளைகரங்களுக்கு, பாராட்டுகள் கிடைத்தன.ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு மகளிர் குழுவுமே, வங்கியில் கடன் பெறும்போது, அதை திரும்பச் செலுத்த வேண்டும்; முதலீட்டைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றன.
வாராக்கடன் அரிதுமகளிர் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன்களில் தேசிய அளவிலான வாராக்கடன் விகிதம் என்பது, புறக்கணிக்கத்தக்க அளவே உள்ளது. வாராக்கடன் குறைவு என்று சொல்வதைவிட, அரிதென்று சொல்லலாம். இதன் மூலம், வங்கிகள் யாருக்கு முன் உவந்து கடன் வழங்க வேண்டும் என்பதை எளிதாகக் கூறிவிட முடியும்.சொல்லப்போனால், இத்தகைய கடன்களுக்கான சராசரி வட்டி விகிதம் 12 சதவீதம் அளவாக உள்ளது. இது வங்கிகளுக்கும் லாபகரமானது தான்.மத்திய அரசின், தீன்தயாள் அந்த்யோதயா எனப்படும், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் மூலம், மகளிர் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கப்படுவதற்கு, வலுவான காரணங்கள் இருக்கின்றன. கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்கு, கடன்தொகையை இரண்டு மடங்காக உடனடியாக உயர்த்தித்தரவும் வழி இருக்கிறது.
மத்திய அரசின் இலக்கு
ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் கண்டறியப்படும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், ஒரு பெண், சுய உதவிக்குழுவின் உறுப்பினராகும் இலக்கை அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது.திருப்பூர் போன்ற நகரங்களில் வசிக்கும் பெண்களுக்கு, இயல்பாகவே, வருவாயை ஈட்டுவதற்கான ஆர்வமும்,திறனும் மேலோங்கியிருக்கிறது.சாதாரண நிலையில் இருந்த குடும்பங்களை உயர்த்தி, தொழிலதிபர் என்ற அந்தஸ்தைப் பெற்ற பெண்கள் பலரையும், அடையாளம் காட்ட முடியும். மகளிர் சக்தி, மகத்தானது.உழைப்பை மறக்காத உன்னத வளைகரங்களின் ஓட்டுகள், அரசியல் கட்சியினருக்கு முக்கியமானது என்பதும் உண்மை!

மூலக்கதை