தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படை!தொகுதிக்கு 3 வீதம் அமைக்க ஏற்பாடு

தினமலர்  தினமலர்
தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படை!தொகுதிக்கு 3 வீதம் அமைக்க ஏற்பாடு

கோவை:கோவையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, போஸ்டர் கிழிப்பு, அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் பணிகளில், அரசு துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். விதிமீறல்களை தடுக்க, தொகுதிக்கு மூன்று வீதம், 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில், வரும் ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மார்ச், 12ல் வேட்பு மனு தாக்கல் துவங்குவதால், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதில், அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.தேதி அறிவிக்கப்பட்டதால், நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, உக்கடம், காந்திபுரம் என, நகரின் பல்வேறு இடங்களில் சுவர்களிலும், பாலங்களின் துாண்களிலும் ஒட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் கிழக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மீது பெயிண்ட் பூசி, அழிக்கப்படுகின்றன.எம்.எல்.ஏ.,க்களின் அலுவலகங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. ஆனால், 'சீல்' வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் மாற்று சாவி உபயோகித்து, அலுவலகத்துக்குள் நுழைய வாய்ப்பிருப்பதால், 'சீல்' வைக்க வேண்டியது அவசியம்.தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தின் முகப்பில், ஜெ., மற்றும் எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் புகைப்படத்துடன் கூடிய போர்டு அகற்றப்படாமல் இருக்கிறது.
அவிநாசி ரோடு மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் உள்ள போஸ்டர்கள் இன்னும் முழுமையாக கிழிக்கப்படவில்லை. அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை.மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாலம், குனியமுத்துார், குறிச்சி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க.,வினரின் பிளக்ஸ் போர்டுகள், தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட 'ஸ்டாலின் விடியல் தரப்போறாரு' போர்டுகள் அகற்றப்படாமல் இருக்கின்றன.பரப்புரைக்கு அரசியல் கட்சியினர் வரும்போது, விதிமீறல்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், அதிகாரிகள், நடுநிலைமையோடு, நேர்மையாக செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'தேர்தல் விதிமீறல் தடுக்க, கோவை மாவட்டத்தில் தொகுதிக்கு மூன்று வீதம், 30 பறக்கும் படைகள் அமைக்கப்படுகின்றன. தாசில்தார் தலைமையில், வீடியோ கேமராமேன், எஸ்.ஐ., உட்பட ஐந்து போலீசார் இடம்பெறுவர். இவர்கள், பணம் பட்டுவாடா உள்ளிட்ட தணிக்கைகளில் ஈடுபடுவர். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுப்பர். தற்போது, போஸ்டர்களை அகற்றுவது, அரசியல் தலைவர்களின் சிலையை மூடுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன' என்றனர்.

மூலக்கதை