பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்: இம்ரான்கான் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்: இம்ரான்கான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக இந்திய-பாகிஸ்தான் ராணுவங்கள் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தன. இந்த உடன்படிக்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பதாக இருநாட்டு ராணுவங்களும் அறிவித்துள்ளன. இதே பாணியில் அனைத்து  பிரச்னைகளையும் பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதற்கேற்ற சாதகமான சூழலை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு உண்டு என ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் கூறியுள்ளது. அதன்படி, காஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றுவதற்குத்  தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். கண்காணிப்புகளை கட்டுப்படுத்தாது: ‘ராணுவ உடன்படிக்கை, தீவிரவாதிகளுக்கு எதிரான வழக்கமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது. எப்போதும்போல் இந்தியாவின் கண்காணிப்புகள் தொடரும். ஏதேனும் அசம்பாவிதங்களைச் செய்ய  முயன்றால் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்’ என்று  ராணுவ ஜெனரல் ஜோஷி கூறியுள்ளார்.

மூலக்கதை