எல்லையில் போர் நிறுத்தம்

தினமலர்  தினமலர்
எல்லையில் போர் நிறுத்தம்

இஸ்லாமாபாத்:இந்தியா - பாக்., எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை முறையாக பின்பற்றுவது தொடர்பான இரு நாடுகளின் கூட்டு அறிக்கைக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாக்., எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, இரு நாட்டு ராணுவ செயல் பிரிவு இயக்குனர்கள் 'ஹாட்லைன்' வாயிலாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.இதைத் தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி உட்பட பிற பகுதிகளில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை முறையாக கடைப்பிடிப்பது என, சமீபத்தில் இரு நாடுகளும் கூட்டு அறிக்கை வெளியிட்டன.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாக்., பிரதமர் இம்ரான் கான், வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில் கூறி உள்ளதாவது:நாங்கள் எப்போதும், அமைதியை பின்பற்ற தயாராக இருக்கிறோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கும் நிலையில், இரு தரப்பு உறவுகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு, இந்திய அரசிடம் உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை வாயிலாக அமைதி தீர்வு காண விரும்புகிறோம்.அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களின் சுய உரிமைகளை மீட்பதற்கும், தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, இம்ரான் கான் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை