கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் எம்.எல்.ஏ., க்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்

தினமலர்  தினமலர்
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் எம்.எல்.ஏ., க்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள், 9 எம்.எல்.ஏ.,க்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கடலுார் மாவட்டம் 3,678 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. 10 தாலுகாக்கள், 14 ஒன்றியங்கள், 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 32 குறுவட்டங்கள், 683 ஊராட்சிகள் மற்றும் 2 எம்.பி., தொகுதிகள், 9 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.மாவட்டத்தில், முன்பு நெல்லிக்குப்பம், கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், விருத்தாசலம், மங்களூர் உட்பட 9 தொகுதிகள் இருந்தன. இந்திய தேர்தல் ஆணையம் தொகுதிகள் மறு சீரமைப்பைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்ட தொகுதிகள் தேர்தலை சந்தித்தன.இதில், சில தொகுதிகள் நீக்கப்பட்டும், சில சேர்க்கப்பட்டும் சிலவற்றின் எல்லைகள் மாற்றியும் சில தனித் தொகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டன.அதன்படி, கடலுார் மாவட்டத்தில், நெல்லிக்குப்பம், மங்களூர் தொகுதிகள் நீக்கப்பட்டு, நெய்வேலி, திட்டக்குடி தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

இதனையடுத்து கடலுார் மாவட்டத்தில் தற்போது கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய 9 சட்டசபை தொகுதிகள்; கடலுார், சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதிகள் உள்ளன. வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள், 9 எம்.எல்.ஏ.,க்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.தேர்தல் ஆணைய அறிவுரையின்படி, ஓட்டுச் சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, நகரம் மற்றும் கிராமப்புறங்களில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பாகங்களை பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே 9 தொகுதிகளில் 2,295 ஓட்டுச் சாவடிகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 702 ஓட்டுச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.திட்டக்குடி தொகுதியில் 304 ஓட்டுச் சாவடி மையங்கள், விருத்தாசலம் 353, நெய்வேலி 299, பண்ருட்டி 341, கடலுார் 343, குறிஞ்சிப்பாடி 335, புவனகிரி 350, சிதம்பரம் 354, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 318 என மொத்தம் 2,997 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மூலக்கதை