ரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு

தினமலர்  தினமலர்
ரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு

புதுடில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'நீதித் துறை மோசமாக உள்ளது. ஒரு நபருக்கு, சரியான நேரத்தில் தீர்ப்பு கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது' என, கூறினார்.இந்நிலையில், நீதித் துறையை இழிவாக பேசிய, ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம், சமூக ஆர்வலரான சாகேத் கோகலே முறையிட்டார். எனினும், அட்டர்னி ஜெனரல், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார்.

அவர், கோகலேவுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின், முழு பேட்டியையும் நான் பார்த்தேன். அவர் கூறிய அனைத்தும், நீதித் துறையின் நன்மைக்காகவே இருந்தன. நீதித் துறையில் உள்ள தீமைகளை மட்டுமே, அவரின் கருத்துக்கள் பிரதிபலித்தன.சட்டத்தின் பார்வையில், அவர், முன்வைத்த கருத்துக்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இல்லை. நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவை குறைக்காது. எனவே, அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தொடர, அனுமதி வழங்க இயலாது.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை