அ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்!'

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க.,  பா.ம.க., இடையே. டீல்!

சென்னை: தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, அ.தி.மு.க.,- பா.ம.க., இடையே, 'டீல்' முடிந்து, கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சி காரணமாக, தொகுதி ஒதுக்கீட்டில், ராமதாஸ் திருப்தி தெரிவித்துள்ளார்.

'அ.தி.மு.க., கூட்டணியில், லோக்சபா தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் தொடர்கின்றன' என, அ.தி.மு.க., தலைமை, 2020 நவம்பரில் அறிவித்தது. அதன் பின், பா.ஜ., மற்றும் பா.ம.க., உடன் ரகசிய பேச்சு துவங்கியது.பா.ம.க., தரப்பில், கூட்டணி தொடர, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், தனி இட ஒதுக்கீடு வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ராமதாஸ் வீட்டுக்குச் சென்று, அமைச்சர்கள் சமரசம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கூட்டணி பேச்சு துவங்கியது.

சட்டசபையில், நேற்று முன்தினம் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை வரவேற்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று மதியம், 'வன்னியர்களுக்கு இடப் பங்கீடு கொடுத்தனர். அதனால், மீண்டும் ஆட்சிக்கு வந்தனர் என்று சொல்லும் வகையில், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, ஒட்டுமொத்த வன்னியர்களின் களப் பணி அமைய வேண்டும்' என, 'டுவிட்டரில்' பதிவு வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ம.க., இடையே, உடன்பாடு ஏற்பட்டது. நேற்று மாலை, 6:30 மணிக்கு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., - துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்; பா.ம.க., தரப்பில், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., கூறியதாவது:சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - பா.ம.க., இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க.,விற்கு, 23 சட்டசபை தொகுதிகள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் நிர்வாகிகள் அமர்ந்து, எந்தெந்த மாவட்டத்தில், எந்த தொகுதி என்பதை முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.


ஒப்பந்தத்தில், அ.தி.மு.க., தரப்பில் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோரும், பா.ம.க., தரப்பில் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோரிடம் இருந்து, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை, அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.பா.ம.க., அதிக தொகுதிகளை கேட்டு, நெருக்கடி தருவதாக கூறப்பட்ட நிலையில், 23 தொகுதிகளுடன், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், திருப்தி அடைந்துள்ளார்.

பா.ஜ.,வுடன் பேச்சு

அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., தரப்பு, கூட்டணி பேச்சை துவக்கி உள்ளது. தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, இணை தேர்தல் பொறுப்பாளர் வி.கே.சிங், மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர், நேற்று காலை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருவரையும், அவர்களின் வீடுகளில், தனித்தனியே சந்தித்து பேசினர்.

அப்போது, பா.ஜ., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளனர். இன்று அல்லது நாளை, பா.ஜ., தொகுதிகள் விபரம் வெளியாக வாய்ப்புள்ளது.அதன் தொடர்ச்சியாக, தே.மு.தி.க., உள்ளிட்ட பிற கட்சிகளுடனான பேச்சை, அ.தி.மு.க., துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவாக பெற்றது ஏன்?



''வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை, அ.தி.மு.க., நிறைவேற்றியதால், தொகுதிகளை குறைத்து பெற்றுள்ளோம்,'' என, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,விற்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை பொறுத்தவரை, எங்கள் நோக்கம், வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்பது தான். அரசு, அதை நிறைவேற்றி உள்ளது. அதனால், இந்த தேர்தலில், நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்து பெற்றுள்ளோம். ஆனாலும், எங்கள் பலம் குறையப் போவதில்லை. நிச்சயமாக, எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும். மீண்டும் முதல்வராக, இ.பி.எஸ்., வருவார்.இவ்வாறு அன்புமணி கூறினார்.


20 ஆண்டுகளுக்கு பின்!



கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம்பெற்றது. அக்கட்சிக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அடுத்து, 2006, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்தது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
அதன் தொடர்ச்சியாக, 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு திரும்பியது. அதே கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் தொடர்கிறது. ஆனால், 2001ல் ஒதுக்கிய தொகுதியை விட, குறைவான தொகுதிகளே, இம்முறை பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

'மாஸ்க்' கழற்ற மறுப்பு!





அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியில், பா.ம.க.,விற்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விபரத்தை, ஓ.பி.எஸ்., அறிவித்தார். அதன் பின், அனைவரும் ஒப்பந்தத்துடன், பத்திரிகைகளுக்கு, 'போஸ்' கொடுத்தனர். அப்போது, ஓ.பி.எஸ்., தவிர, அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். புகைப்படக் கலைஞர்கள், அன்புமணியிடம் முக கவசத்தை கழற்றும்படி கேட்டனர்; அவர் மறுத்து விட்டார்.

மூலக்கதை