மீண்டும் ஜெ., அரசு அமைப்போம்: பழனிசாமி நம்பிக்கை

தினமலர்  தினமலர்
மீண்டும் ஜெ., அரசு அமைப்போம்: பழனிசாமி நம்பிக்கை

சென்னை:''எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்கும் விதமாக, வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெ., அரசு அமைப்போம்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது:இ.பி.எஸ்., ஆட்சி, ஒரு மாதம் தான் இருக்கும்; மூன்று மாதம் தான் இருக்கும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை செய்து வந்தனர்.

எண்ணற்ற திட்டங்கள்



அவற்றை எல்லாம் முறியடித்து, நான்காண்டு காலம் நிறைவு பெற்று, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். எம்.ஜி.ஆர்., - ஜெ., கண்ட கனவை, என் தலைமையிலான அரசு, வெற்றிகரமாக நிறைவேற்றி, நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது.நான் பதவியேற்றதில் இருந்து இன்று வரை, நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் வாயிலாக, தமிழகம் இன்றைக்கு, 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற அளவுக்கு உயர்ந்து, ஏற்றம் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியினரே மூக்கின் மேல், விரலை வைத்து பாராட்டுகிற அரசு, ஜெ., அரசு என்பதை, நாங்கள் எடுத்துக் காட்டியுள்ளோம். சிறந்த ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய, துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி.சபையை நடுநிலையோடு நடத்திய சபாநாயகர், அவருக்கு துணையாக இருந்த துணைத் தலைவர், அரசு கொறடா, அரசு சிறப்பாக செயல்பட, அனைத்து வழிகளிலும் துணை நின்ற அதிகாரிகள், அரசு அலுவலர்கள் ஆகியோருக்கும் நன்றி.பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். கடந்த, 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத, காவிரி நதி நீர் பிரச்னையை, சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு கண்டோம்.டெல்டா பாசன விவசாயிகளுக்கு அரணாக இருந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இடுபொருள் நிவாரணம் வழங்கினோம்.

சாதனை



கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை ஜெ., அரசு காத்தது. தடையில்லா மின்சாரம், அதிகமான சட்டக் கல்லுாரி, 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள், மூன்று கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்து, சாதனை படைத்துள்ளோம்.நான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இன்று வரை, பல்வேறு சாதனைகளை புரிந்து, சாதனை படைத்த அரசாக திகழ்கிறது. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்கும் விதமாக, வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெ., அரசு அமைப்போம். எங்களுடைய கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்.இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

'ஸ்டாலின் ஆசை பலிக்காது'



''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராகப் போவதில்லை. தி.மு.க.,வினர், சட்ட சபைக்கு வரவே போவதில்லை,'' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க.,விற்கு மாபெரும் மக்கள் செல்வாக்கு பெருகுகிறது. இதை பொறுக்க முடியாமல், அதை திசை திருப்பும் வகையில், 'மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 4.79 லட்சம் கோடி ரூபாய், நிலுவைக் கடன் உள்ளது. 'பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது' என்று, முற்றிலும் தவறான வாதங்களை, பொது வெளியில் ஸ்டாலின் எடுத்து வைத்துள்ளார்.

அவர் தன் வாதத்தை, சட்டசபைக்கு வந்து முன் வைத்தால், என் பதிலை கேட்க முடியும். ஆனால், தி.மு.க.,வின் வழக்கப்படி, அவர் சபையை புறக்கணித்து விட்டார். மக்கள் ஓட்டளித்து, சட்டசபைக்கு அனுப்புவதே, தொகுதி பிரச்னையை பேசுவதற்காகத் தான். அந்த ஜனநாயக கடமையை, தி.மு.க.,வினர் என்றுமே மதிப்பதில்லை. ஏதோ சுற்றுலா போல வருகின்றனர். இங்கே உட்கார்ந்து சிரிக்கின்றனர்; பேசுகின்றனர். வெளிநடப்பு என்று கூறிவிட்டு, சென்று விடுகின்றனர்.'ஸ்டாலின் முதல்வரான பின் தான், சபைக்கு வருவோம்' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லி இருக்கிறார். அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை; அந்த அத்தை உருமாறி, சித்தப்பா ஆகப் போவதும் இல்லை. ஸ்டாலின், முதல்வராகப் போவதும் இல்லை. தி.மு.க.,வினர், என்றைக்குமே சட்டசபைக்கு வரவே போவதில்லை. தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்திக்கப் போகிறது.

எதிரிகளால் இம்மியும் அசைக்க முடியாத சக்தியாக, நாம் உருவெடுத்திருக்கிறோம். எல்லா துறைகளிலும், இந்தியாவில் முதல் மாநிலமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டியிருக்கிறோம். தமிழகம் பெற்றுள்ள தேசிய அளவிலான விருதுகள், இதை பறைசாற்றுகின்றன.இந்த பட்ஜெட்டில், அனைத்து தரப்பு மக்களும் மனம் மகிழும்படி, ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற, தாராளமாக நிதி ஒதுக்கி இருக்கிறோம். மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சி அமைய, ஓயாது உழைப்போம். களம் புகும் போர்க்களத்தில், கம்பீரமாக ஜெயிப்போம்.
புனித ஜார்ஜ் கோட்டையில், மீண்டும் சித்திரை திங்களில், முத்திரை பதித்து, புது வரலாறு படைப்போம். மே மாதம், சட்டசபையில் மீண்டும் சந்திப்போம்.இவ்வாறு ஓ.பி.எஸ்., பேசினார்.

மூலக்கதை