'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே!'

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே!

ஸ்ரீபெரும்புதுார்:''அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம், கடன் வாங்குவது தான்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற, தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது-:

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததால், சட்டசபையில் நேற்று முன்தினம் அறிவித்த அறிவிப்புகளுக்கு, அரசாணை கூட போட முடியாது. ராமதாஸ் சொல்லி, உள் ஒதுக்கீடு ஒதுக்கியது, வெறும் அறிவிப்பு தான். அதை செய்யப் போவது, தி.மு.க., தான். அ.தி.மு.க., ஆட்சி முடியப் போகிறது என்பதற்காக, தினந்தோறும் ஏதேதோ திட்டங்களை துவங்குவதாக நாடகமாடுகின்றனர்.

முதல்வர் சாதனை

அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம், கடன் வாங்குவது. கடன் வாங்குவதில், முதல்வர் சாதனை படைத்துள்ளார்.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, கடன் தொகை, 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 10 ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், கடன் தொகை, 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடன் வாங்கிய பணத்தை, அரசு கஜானாவில் சேர்த்து, கொள்ளை அடித்துள்ளனர்.

நிதி ஆதாரத்தை பெருக்க திட்டமிடவில்லை. பினாமிகளுக்கு, உறவினர்களுக்கு, 'டெண்டர்'கள் கொடுத்து, எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமோ, அதை மட்டும் செய்தனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் புரிவோர் என, எந்த தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை. இந்த பின்னடைவில் இருந்து, தமிழகத்தை சரி செய்ய வேண்டும். ஊழல் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற பலம், தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது

முதல்வர், தன்னுடைய ஆட்சியின் மாபெரும் சாதனையாக, குடிமராமத்து திட்டத்தை சொல்லி வருகிறார். குடிமராமத்து திட்டம், கொள்ளையடிக்கிற திட்டம். மண்ணை அள்ளுவதாக சொல்லி, பணத்தை அள்ளுகின்றனர். இதுவரை, 4,000 கோடி ரூபாய் வரை செலவு செய்து உள்ளதாக, கணக்கு எழுதியுள்ளனர்.மோடிக்கு மறந்து விட்டதா?குடிமராமத்து பணிக்கு பதிலாக, சவுடு மண் கொள்ளை தான் நடந்தது. துார்வாருகிற மண்ணை, விவசாயிகளுக்கு தர வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு தருவதை போல, 'பில்' போட்டு, தனியாருக்கு விற்கின்றனர்.

முன்பெல்லாம் மண் எடுத்தால், மணல் கொள்ளைஎன்பதை கண்டுபிடித்து விடலாம். இப்போது, யார் மண் எடுத்தாலும், குடிமராமத்து பணி நடப்பதாக சொல்லி, திருட்டை மறைத்து விடுகின்றனர். கோவை கூட்டத்தில், மோடி பேசும்போது, தான் பிரதமர் என்பதையே மறந்து, தி.மு.க., மீது, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். முதல்வர் உத்தமர் என்றும், பன்னீர்செல்வம் புனிதர் என்றும், மோடி சொல்லிக் கொள்ளட்டும்; எனக்கு ஆட்சேபனை இல்லை.

அரசியல் ரீதியாக, தி.மு.க.,வை மோடி விமர்சனம் செய்யட்டும். அதற்கு பதில் தருவதற்கு, நான் தயார். தமிழகத்தில், தி.மு.க., பலம் இழந்ததாக மோடி சொல்கிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள், மோடிக்கு மறந்து விட்டதா?இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மூலக்கதை