முக கவசம் பயன்படுத்தாதீர்'

தினமலர்  தினமலர்
முக கவசம் பயன்படுத்தாதீர்

முக கவசம் பயன்படுத்தாதீர்'

பிரஸல்ஸ்: ஐரோப்பிய நாடான பெல்ஜியமில், கொரோனா வைரசால், 7.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை, 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கிடையே, நாட்டு மக்களுக்கு, துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை, பெல்ஜியம் அரசு, இலவசமாக வினியோகித்து வந்தது.

இந்நிலையில், அந்த முக கவசங்களை பயன்படுத்துவோருக்கு, உடல்நலக்கோளாறு ஏற்படும் ஆபத்து உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் பிரான்க் வாண்டன்பிரூக் கூறுகையில்,“அரசால் வினியோகிக்கப்பட்ட முக கவசங்களை பயன்படுத்தவேண்டாம்,” என்றார்.

கட்டாய தகனம் இல்லை

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 81 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 457 ஆக உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், கொரோனாவால் உயிரிழக்கும் சிறுபான்மையின சமூகத்தினரின் உடல்கள், வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டு வந்தன. இதற்கு, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினர் மட்டுமல்லாமல், சர்வதேச மனித உரிமைகள் குழுக்களும் கடும் கண்டனம் தெரிவித்தன.

கடும் எதிர்ப்பு கிளம்பியதால், வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் உத்தரவை, இலங்கை அரசு, நேற்று திரும்பப் பெற்றது.

இந்திய வம்சாவளிக்கு சிறைசிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

லண்டனில் இருந்து, அகதா மகேஷ் எயமலை, 39, என்ற இந்திய வம்சாவளிப் பெண், பிரிட்டனைச் சேர்ந்த, தன் கணவர் நைஜல் ஸ்கியா, 52, என்பவருடன், சிங்கப்பூர் வந்துள்ளார். இரண்டு பேரும் இங்கு தனித்தனியே தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும், விதிகளை மீறி, அவர்கள் இருவரும், ஓட்டலில் சந்தித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும், இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 55 ஆயிரம் ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டது.

விவேக் மூர்த்தியின் முதல் பணி

வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், நாட்டின் சர்ஜன் ஜெனரல் பதவிக்கு, இந்திய வம்சாவளி டாக்டரான, விவேக் மூர்த்தியின் பெயரை பரிந்துரைத்தார். இந்நிலையில், அவரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான விசாரணை, நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பேசிய விவேக் மூர்த்தி கூறுகையில், “கொரோனா வைரசால், அமெரிக்க மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, நான் பதவியேற்றதும், கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்,” என்றார்.

கொரோனா பரிசோதனை 'சிப்'

வாஷிங்டன்: அமெரிக்காவில், நாட்டு மக்களுக்கு, கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பரிசோதனை முடிவுகளை, குறைந்த நேரத்தில் அறிந்துகொள்ளும் வகையில், ரைஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான 'சிப்' ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த சிப் உதவியுடன், பரிசோதனை முடிவுகளை, 55 நிமிடங்களுக்குள், மொபைல் போன் வாயிலாக, நம்மால் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 கோடி பேருக்கு தடுப்பூசி

வாஷிங்டன்: அமெரிக்காவில், மக்களுக்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தை செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடக்கின்றன. இந்நிலையில், ஐந்து கோடி பேருக்கு, தடுப்பூசி மருந்தின் முதல், 'டோஸ்' செலுத்தப்பட்டு, மிகப்பெரிய மைல்கல்லை, அமெரிக்கா கடந்துள்ளது. அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்று, 100 நாட்கள் ஆவதற்குள், நாட்டு மக்கள், 10 கோடி பேருக்கு, தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதை, அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

300 மாணவியர் கடத்தல்

லாகோஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜாம்பாரா மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர், நேற்று புகுந்தார். உள்ளே சென்ற அந்த நபர், துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி, 300க்கும் மேற்பட்ட மாணவியரை, அங்கிருந்து கடத்திச் சென்றார். பள்ளிக்கு வரும் வழியில், அருகில் இருந்த ராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடியில், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது. எனினும், இதில் உயிரிழப்புகள் நேர்ந்ததா என்பது தெரியவரவில்லை. மாயமான மாணவியரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மூலக்கதை