சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்

புதுடெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கென மூன்று அடுக்கு குறைதீர்ப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு அடுக்குகளை அந்த நிறுவனங்களே சுய கட்டுப்பாடு அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

முதலாவது சமூக வலைதளங்களை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவதற்குரியவையாகும். மூன்றாவது அடுக்கு இதை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கண்காணிப்பதாகும்.

ஓடிடி எனப்படும் தளங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் குறை கேட்பதற்கென முதன்மை அதிகாரி மற்றும் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களாயிருப்பின் உள்நாட்டில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

சுய கட்டுப்பாட்டு அமைப் பானது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ இருக்க வேண்டும்.

இவர் நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார். சமூக வலைதளங்களில் முறை கேடான செய்திகள் பரவும்போது அதை முதலில் பரப்பியவர் பற்றிய தகவலை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

சமூக வலைதளங்கள் இருவகைகளில் செயல்படுவதாக இருக்க வேண்டும். இது குறித்த பகுப்பாய்வை மத்திய அரசு விரைவில் வெளியிடும்.

இந்த நிறுவனங்கள் குறைதீர்ப்பு வசதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறைதீர்ப்பு அதிகாரி 24 மணி நேரத்திற்குள் தன்னிடம் வரும் புகாருக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும்.

அல்லது பிரச்சினைக்கு 15 நாட்களுக்குள் உறுதியான தீர்வை எட்டியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்டடை தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் மேற்கண்ட வழிகாட்டல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், 5 மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோருக்கான வழிகாட்டு ெநறிமுறைகளை ஒரு வாரத்திற்குள் வெளியிடுமாறு தலைமை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிமுறைகள் குறித்து ஆராய தேர்தல் ஆணைய அதிகாரி திரீந்திர சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தேர்தல் ஆணையக் குழுவின் தற்போதைய வழிகாட்டுதல்களுடன், மத்திய அரசின் புதிய விதிகளையும் ஒப்பிட்டு ஒரு வாரத்திற்குள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பார்.

இதன்பின்னர், 5 மாநில தேர்தல்களின் போது சமூக ஊடகங்களை கண்காணிப்பது மற்றும் பயன்படுத்துதல் குறித்த புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை