தொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.

தினமலர்  தினமலர்
தொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.

புதுடில்லி: 'தற்போது அமலில் உள்ள, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள், அடுத்த மாதம், 31 வரை தொடரும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பல்வேறு கட்டங்களாக, படிப்படியாக தளர்த்தப்பட்டன.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வராததை அடுத்து, பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு விதித்தது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை, ஒவ்வொரு மாத இறுதியிலும் நீட்டித்து, மத்திய அரசுஉத்தரவிட்டு வருகிறது.மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை கருத்தில் வைத்து, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த ஜன., 27ல் அறிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். திரை அரங்கங்கள், 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படலாம். நீச்சல் குளங்களை பொது மக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி தேவையில்லை. சமூக, ஆன்மிக, விளையாட்டு, பொழுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள், மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த தொற்று தடுப்பு வழிகாட்டுதல்கள், அடுத்த மாதம், 31 வரை தொடர்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை