வில்லங்கமாக மாறும் விருப்ப மனு கட்டணம்: தலைவர்கள், தொண்டர்களுக்கு சிக்கல்

தினமலர்  தினமலர்
வில்லங்கமாக மாறும் விருப்ப மனு கட்டணம்: தலைவர்கள், தொண்டர்களுக்கு சிக்கல்

'வேட்பாளராக விரும்புவோர், விருப்ப மனு கொடுக்கலாம்' என, கட்சிகள் அறிவித்து உள்ளன. இது சாதாரண நடைமுறை.ஆனால், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவதும், யாருக்காக வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எந்த தொகுதிக்கு வேண்டுமானாலும் விருப்ப மனு தரலாம் என்ற அறிவிப்பு, பெரிய ஊழலுக்கு, கதவை திறந்திருக்கிறது.

காரணம், விருப்ப மனுவை சும்மா கொடுக்க முடியாது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும், முக்கிய கட்சிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம். பெரிய கட்சிகள், இதிலேயே கோடிக் கணக்கில் சேகரித்து விடும். கட்டணத்தை ரொக்கமாக வாங்கி கொண்டு ரசீது கொடுக்கின்றன கட்சிகள். அது சட்ட விரோதம் என்கிறது, வருமான வரி சட்டம்.

பண பரிமாற்றத்தில் ரொக்கமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்கக் கூடாது; 'செக், டிராப்ட்' அல்லது 'டிஜிட்டல்' வழியாகத் தான் கொடுக்கலாம். அப்படி இருக்கையில், ஆளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வீதம் ரொக்கமாக செலுத்துவது எப்படி என, வரி அதிகாரிகள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.ரொக்கமாக கொடுப்பது மட்டும் அல்ல; வாங்கினாலும் குற்றம். ஆனால், கட்சிகள் கட்டு கட்டாக வாங்கி பெட்டியில் போடுகின்றன.

கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சியாக, கட்சிகள் இதை செய்யக்கூடும் என, கணக்காளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். என்றாலும், விருப்ப மனு போடும் தனி நபர்கள் தான், வருமான வரி சட்டங்களால் பிரச்னைகளை சந்திப்பர் என்றும், அவர்கள் எச்சரிக்கின்றனர்.
விருப்ப மனு கட்டணமாக குவியும் பணத்தை, நன்கொடை என கட்சிகள் கணக்கு காட்டினாலும், சிக்கல் தான் என்கிறார், ஆடிட்டர் ஸ்ரீராம் சேஷாத்ரி. 2,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெறுவது சட்ட விரோதம். தலைவர்கள் பலருக்கு தெரியாத ஒரு பிரச்னையையும் ஆடிட்டர் வெளிச்சம் போடுகிறார். தலைவர் களின் பெயராலும், நிறைய தொண்டர்கள் விருப்ப மனு போடுகின்றனர்; அதற்கும் கட்டணம் செலுத்துகின்றனர். அது கட்சிக்கு போய் சேர்ந்தாலும், சம்பந்தப்பட்ட தலைவருக்காக செலுத்தப் படுவதால், அந்த தலைவரின் வருமானமாகத் தான், சட்டம் அதை கணக்கிடும்.

தலைவர் வருமான கணக்கு தாக்கல் செய்யும்போது, இதையும் பதிவு செய்தாக வேண்டும். இல்லை என்றால், வருமானத்தை குறைத்து காட்டினார் என்று சட்டம் பாயும் எனவும், அவர் எச்சரிக்கிறார்.தலைவர்கள் மீது அல்லது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என, வரித்துறை அதிகாரியை கேட்டபோது, 'நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்று மட்டும் அவர் சொன்னார்.
-

கட்டணம் எவ்வளவு?



* தி.மு.க.,வில் பொது தொகுதியில் போட்டியிட, விருப்ப மனு கட்டணம், 25,000 ரூபாய்.
* மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு, 15,000 ரூபாய்.
* விண்ணப்ப படிவத்தின் விலை, 1,000 ரூபாய்.
* அ.தி.மு.க.,வில், 15,000 ரூபாய் கட்டணம்.
* புதுச்சேரி, 5,000 ரூபாய்.

மூலக்கதை