எங்களுக்கே அல்வாவா?: அ.தி.மு.க.,வினர் 'காண்டு'

தினமலர்  தினமலர்
எங்களுக்கே அல்வாவா?: அ.தி.மு.க.,வினர் காண்டு

திருநெல்வேலி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றவர், நயினார் நாகேந்திரன்; அமைச்சராகவும் இருந்தவர்.
எந்த கட்சியில் இருந்தபோது என்பது, தேவை இல்லாத கேள்வி. இன்றைக்கு அவர், பா.ஜ.,வில் மாநில துணைத் தலைவர். கட்சியை அவர் நம்புவதை காட்டிலும் அதிகமாக, அவரை ரொம்பவும் நம்பி இருக்கிறது கட்சி. அவருக்கு திருநெல்வேலி ஜங்ஷனில், எவர் பார்வைக்கும் தப்ப முடியாத இடத்தில், ஒரு ஓட்டல் இருக்கிறது.

அவர் போட்டியிட்ட போதெல்லாம் தேர்தல் அலுவலகமாக இயங்கியது, அந்த ஓட்டல்.எவ்வளவு சோர்வாக, ர.ர.,க்கள் அங்கே வந்தாலும், அவர்களை உற்சாகம் பொங்க திருப்பி அனுப்பும் சக்தி, அந்த ஓட்டல் வளாகத்துக்கு உண்டு.அந்த வளாகம் இந்த முறை, பா.ஜ., தேர்தல் காரியாலயமாக மாறியுள்ளது. ஹோமம், பூஜை என்று அமர்க்களப்பட்டது வளாகம். மாநில தலைவர் முருகன் வந்தபோது, தச்சநல்லுாரில் இருந்து, இந்த ஆபீஸ் வரை, 500க்கும் மேற்பட்ட, 'டூவீலர் ரைடர்கள்' அவரை பேரணியாக அழைத்து வந்தனர். அது ஒரு முக்கியமான, 'ரூட்.' பேரணி அலப்பறையால் அந்த வட்டாரமே ஸ்தம்பித்தது.

அ.தி.மு.க.,வும் தான். அவர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. இதை மட்டுமா? 'திருநெல்வேலி தொகுதியில் நம் வேட்பாளராக நயினார் களம் இறங்குவார்' என்ற முருகனின் அறிவிப்பையும் எதிர் பார்க்கவில்லை.இதுவரை அ.தி.மு.க., போட்டியிட்டு வென்ற தொகுதி. கூட்டணியில் வேறு கட்சிகள் மன்றாடி கேட்டும் இதுவரை விட்டுக் கொடுத்தது இல்லை. அப்படிப்பட்ட அ.தி.மு.க., கோட்டையை பட்டா போட்டு கொடுப்பதா? என்று அவர்களுக்கு அதிர்ச்சி.
அதுவும், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை; தொகுதி பங்கீடு நடக்கவில்லை; அதற்குள் இந்த அறிவிப்பா? என்று கோபம். முருகன் இப்படித்தான், 'டமால், டுமீல்' என, சில விஷயங்களை அறிவித்து, கூட்டணி குளத்தில் ஆழம் பார்ப்பார் என்பது அவர்களுக்கு உறைக்கவில்லை. அவர்கள் நினைத்தது, இம்முறையும் நமக்குதான்; அநேகமாக மாவட்ட செயலர் தச்சை கணேச ராஜாவுக்கு சீட் கிடைக்கும் என்று தான்.

வேகமாக என்ன நடந்ததோ, திடீரென தேர்தல் பா.ஜ., அலுவலக திறப்பை தள்ளிவைத்தனர். அதே ஏரியாவில் இன்னொரு இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 'நயினார் தான் வேட்பாளர் என்பதில் சிக்கல் இல்லை. அவருடைய 'தாய் வீட்டு' சொந்தங்களால் சிக்கல் வரலாம்' என, ஒப்புக் கொண்டார் ஒரு நிர்வாகி.

மூலக்கதை