54 குடுங்க போதும்! 12 தர்றோம்,போங்க: காங். - தி.மு.க.,பேச்சில் 'காமெடி'

தினமலர்  தினமலர்
54 குடுங்க போதும்! 12 தர்றோம்,போங்க: காங்.  தி.மு.க.,பேச்சில் காமெடி

முதல் சுற்று பேச்சில், தி.மு.க., - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 54 கேட்ட காங்கிரசுக்கு, 12 தான் என்கிறதாம், அறிவாலயம்.வேக வேகமாக, சத்தியமூர்த்தி பவனுக்கு திரும்பிய காங்கிரசார், பசி எடுக்கும் வரை பேசினர்.

40 க்கு குறைய வேண்டாம் என, முடிவு செய்து, மறுபடியும் பேச்சுக்கு போக காத்திருக்கின்றனர். அறிவாலயத்தில் நடந்த பேச்சில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்., தரப்பில் பங்கேற்றனர்.தி.மு.க., தரப்பில், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி, முதன்மை செயலர் கே.என்.நேரு, கையில் பட்டியலுடன் இருந்தனர்.

அறிவாலயத்துக்குள் காங்கிரஸ், 'டீம்' நுழைந்ததில் இருந்து, திரும்பி வரும் வரை ஆன
நேரம், 40 நிமிடங்கள். அதில், வடை, காபி சாப்பிட, 20 நிமிடம். சாப்பிட்டு கொண்டே பேசினாலும், எவ்வளவு பேரம் நடந்திருக்க முடியும் என, கரும்பலகையில் கணக்கு எழுதி காட்டுகிறது, சத்திய மூர்த்தி பவன் வட்டாரம்.தோண்டி, துருவி விசாரித்தபோது தெரிந்தது, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, ஒன்பது லோக்சபா தொகுதிகள் அடிப்படையில், 9 x 6 கணக்கில், 54 சட்டசபை தொகுதிகள் வேண்டும் என, காங்கிரஸ் கேட்டுள்ளது. அவர்கள் கொடுத்த தொகுதி பட்டியலை, ஒரு 'கிளான்ஸ்' கூட பார்க்காமல், 'வி வில் கிவ் யு 12 சீட்ஸ்' என்றது, அறிவாலய, 'டீம்'. காங்கிரஸ் குழுவில் தமிழ் தெரியாதவர்கள் அதிகம் இல்லையா, அவர்கள் வசதிக்காக இந்த ஆங்கில பரிமாற்றம்.

எல்லாம், பேசி ஒத்திகை பார்த்த வசனங்கள் தான்.நரியை பரியாக்கிய ஈசனே வந்தால் தான், 12ஐ, 54 ஆக்க முடியும் என்பதால், காங்., 'டீம்' புறப்பட்டது. பிளேட்டில் வடையும் கோப்பையில் காபியும் மிச்சம் இருந்தன. எதையும் வீணாக்க கூடாது என்பது, தி.மு.க., கொள்கை என்பதால், 'என்ன கிளம்பிட்டீங்க...' என, துரைமுருகன் கேட்க, 'ராகுலிடம் பேசிட்டு வாரோம்' என, பதில் சொல்லி இருக்கின்றனர். 'நல்லா பேசிட்டு வாங்க' என வாழ்த்தி வழி அனுப்பி இருக்கிறார், துரை. அவர் சும்மா பேசினாலே, நக்கல் தொனி தான் இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு சொல்லி புரியவைக்க அழகிரி, பாவம், ரொம்பவே மெனக்கெட்டுள்ளார்.

வெளியே வந்த தினேஷ் குண்டுராவ், செய்தியாளர்களிடம் முகம் காட்ட விரும்பாமல், 'எங்கே கார்' என, கேட்டபடி வேகமாக போய் விட்டார். சிரித்தபடியே பேச சென்ற, காங்கிரஸ் தலைவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.இதற்கிடையில், காங்கிரசுடனான பேச்சு ஒரே நாளில் முடிந்ததாக வரலாறே கிடையாது என்பதை அறிந்திருந்த காரணத்தால், திருச்சி நேரு, பாதியிலேயே கிளம்பி விட்டாராம்.

எவ்வளவு அடி விழுந்தாலும் வெளியே காட்டாமல் இருக்க பழகிப் போன காங்கிரஸ் தலைவர் அழகிரி, 'பேச்சு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. தலைமையுடன் கலந்து பேசி, இரண்டாம் சுற்றுக்கு வருவோம்' என்றார், ஏற்ற இறக்கம் இல்லாமல்.சத்தியமூர்த்தி பவனுக்கு திரும்பி வந்து ஆலோசனை நடத்திய குழுவிடம் நிர்வாகிகள், '40க்கு குறையாமல் கேப்போம். அதுக்கு உடன்பட்டால், நாங்குநேரியில் பேசறப்போ, ஸ்டாலினை முதல்வராக்க போவதாக, ராகுலை சொல்ல வைப்போம். இல்லேன்னா வேற வழிய பாப்போம்' என, கோஷ்டிகள் சார்பாக சொல்ல, உம்மன் சாண்டியும், குண்டுராவும் தலையசைத்து விட்டு ஓட்டலுக்கு கிளம்பினர்.

மூலக்கதை