விபத்து காப்பீடு பாலிசி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி

தினமலர்  தினமலர்
விபத்து காப்பீடு பாலிசி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி

புதுடில்லி:பொது மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், அதன் வாடிக்கையாளர்களுக்கு, சாதாரண தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசியை அறிமுகம் செய்யுமாறு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ கேட்டுக் கொண்டுள்ளது.

தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டங்கள், பலவிதங்களில் ஏராளமாக இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் எதை தேர்வு செய்வது என்பதில் மிகவும் குழப்பமடைகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு விதமான அம்சங்களை கொண்டிருப்பதால், தேர்வு செய்வதில் பலருக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே இத்தகைய சிக்கல்கள் எதுவும் இல்லாமல், அடிப்படையான அம்சங்களை மட்டும் கொண்ட, சாதாரண தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்யுமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிவுறுத்தியுள்ளது. மேலும் அடிப்படையான காப்பீட்டு அம்சங்களையும்; எளிதில் புரிந்துகொள்ளும் வார்த்தைகளையும் கொண்ட, அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான, ஒரு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* இந்த திட்டத்துக்கு, அனைத்து நிறுவனங்களும், ‘சரல் சுரக்‌ஷா பீமா’ என்ற ஒரே பெயரையே வைக்க வேண்டும். கண்டிப்பாக வேறு எந்த பெயரும் வைக்க கூடாது
* இந்த காப்பீட்டை ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வழங்க வேண்டும்
* காப்பீட்டின் குறைந்தபட்ச உத்தரவாத தொகை, 2.5 லட்சத்திலிருந்து, 1 கோடி ரூபாய் வரை இருக்கலாம். இதன் மடங்குகள், 50 ஆயிரம் ரூபாயில் இருக்க வேண்டும்
* காப்பீட்டு நிறுவனங்கள் விரும்பினால், கூடுதல் அம்சங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பெயர் மாறக்கூடாது
* பாலிசி காலம் ஓராண்டு
*பாலிசி காலத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் பாலிசிதாரருக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில், 100 சதவீதம் வரை வழங்க வேண்டும்
*விபத்து நடந்த தேதியிலிருந்து, 12 மாதங்களுக்குள் காயத்தால் இறந்தாலும் வழங்க வேண்டும்
*அங்ககீனம் அடைதல், பார்வை பறிபோதல் உள்ளிட்டவைகளுக்கு தன்மைக்கேற்ப இழப்பீடு வழங்கப்படும்.
*18 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளோர், இந்த பாலிசியை பெற தகுதி படைத்தவர்கள்.
*‘குழும’ காப்பீடு எனும் பட்சத்தில், பாலிசியின் பெயரில், ‘குரூப்’ என்ற வார்த்தை சேர்க்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை