வெளிப்படைத்தன்மையை கொண்டு வர விரும்புகிறோம் - டுவிட்டர் சி.இ.ஓ.,

தினமலர்  தினமலர்
வெளிப்படைத்தன்மையை கொண்டு வர விரும்புகிறோம்  டுவிட்டர் சி.இ.ஓ.,

புது டில்லி: சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை நேற்று வெளியிட்ட நிலையில், டுவிட்டர் வெளிப்படைத்தன்மையே விரும்புகிறது என அதன் சி.இ.ஓ., ஜாக் டார்சே கூறினார்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இது வன்முறையாக மாறியது. இளைஞர் ஒருவர் டிராக்டர் விபத்தில் உயிரிழந்தார். சமூக ஊடகங்களில் குறிப்பாக டுவிட்டரில் விவசாயிகள் படுகொலை என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது. இதனையடுத்து அந்த தலைப்பில் கருத்து பதிவிட்டவர்களை முடுக்குமாறு டுவிட்டருக்கு உத்தரவிட்டது. அதில் சிலரின் பக்கங்களை கருத்துச் சுதந்திரம் காரணமாக முடக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து சமூக ஊடகங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தியது. நேற்று பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றிற்கும், ஓ.டி.டி., தளங்களுக்கும் புதிய விதிமுறைகளை அறிவித்தது. அவை உடனடியாக அமலுக்கு வந்தன.

அதன்படி ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனங்களும் உள்நாட்டைச் சேர்ந்த குறைதீர்வு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர்கள் 24 மணி நேரத்தில் புகார்களைப் பதிவுசெய்ய வேண்டும். அதனை 15 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


இந்நிலையில் டுவிட்டர் சி.இ.ஓ., ஜாக் டார்சே ஆய்வாளர்களிடம் பேசியதாவது: பலர் எங்களை நம்பவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனங்களும் நம்பிக்கை குறைவை சந்திக்கின்றன. கருத்துக்களை சரிசெய்யும் முயற்சியில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க மக்களுக்கு அதிக அதிகாரம் தரப்படும்.

தவறான கணக்குகளை தானாகவே தடுக்கவும், முடக்கவும் ஒரு வழியை அறிமுகப்படுத்தும் திட்டமுள்ளது. வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, பொறுப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே தாக்கத்தை ஏற்படுத்தும். என கூறினார்.


மூலக்கதை