பெண்ணை கொலை செய்து இருதயத்தை சமைத்தவர் கைது

தினமலர்  தினமலர்
பெண்ணை கொலை செய்து இருதயத்தை சமைத்தவர் கைது

வாஷிங்டன்:அமெரிக்காவில் மூன்று பேரை கொலை செய்து ஒருவரின் இருதயத்தை சமைத்துச் சாப்பிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால். இவர் ஒரு பெண்ணைக் கொன்று அவரது உடலில் இருந்து இதயத்தை பிரித்தெடுத்து தன் உறவினர் வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு அந்த இதயத்துடன் வேக வைத்த உருளைக் கிழங்கு மசாலா ஆகியவற்றை சேர்த்து மணக்க மணக்க தானே சமைத்துள்ளார்.அதன் பின் வறுத்த இருதயத்தை உறவினர் அவரது மனைவி மற்றும் அவர்களின் 4 வயது பேத்திக்கு பரிமாறி தானும் ருசி பார்த்துள்ளார்.நர மாமிசம் குமட்டியதால் உறவினரின் குடும்பத்தினர் அதை சாப்பிட மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் மூவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதில் உறவினரும் பேத்தியும் உயிரிழந்தனர். உறவினரின் மனைவி மூர்ச்சையாகி விழுந்துள்ளார். உடனே லாரன்ஸ் தப்பியோடி விட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் லாரன்சை கைது செய்தனர்.அப்போது அவர் நடந்த சம்பவத்தை விவரித்து 'உறவினரின் குடும்பத்தை பிடித்திருந்த பிசாசை ஓட்டுவதற்காக அவர்களுக்கு இருதய வறுவலை சாப்பிடக் கொடுத்தேன்' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை