மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்

வட அமெரிக்காவில் "மினசோட்டா மாநிலத்தின் ஒரு அடையாளம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்" என்ற வகையில் பொங்கல் விழாவினை மிகச் சிறந்த தமிழர் விழாவாக வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் கொண்டாடியது என்றால் மிகையில்லை.

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும், இயற்கையை வழிபட்டு, தங்கள் நன்றியைச் செலுத்தி, பொங்கலிட்டு கொண்டாடும் ஒரு விழா என்றால் அது நமது பொங்கல் விழாவாகும். அத்தகைய தமிழர் திருவிழாவை, புலம்பெயர்ந்து வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் வாழும் நாம், நமது மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை கொண்டாடிவரும் சங்கமம் விழாவினில், இந்த ஆண்டு முதல் முறையாக இணையம் வழியாக சனவரி 24 ஞாயிற்றுக் கிழமை பகல் 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிடும் நிகழ்வாகத் திட்டமிட்டோம்.

சிறப்பான நிகழ்ச்சிகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணையம் வழியாக நடத்துவதால் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள் என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது, ஆனால், மலரும் மொட்டும் முதல் பாரதியாரின் கவிதை வரிகளை பாடலாக பாடியது. ஆடல், பாடல் என்று அனைத்து துறைகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கு கொண்ட தித்திக்கும் சுவையுடன் கூடிய சக்கரைப்பொங்கலாக நிகழ்ச்சிகள் அனைத்தும் இரசிக்கும் படி இருந்தது. ஒவ்வொரு நிகழ்விற்கும் குழந்தைகளுக்கு பயிற்றுவித்த பாடல், நடன ஆசிரியர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும், உதவிய செய்த பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி.

தமிழ்த் தாய் வாழ்த்து
தமிழ்ச் சங்க நிர்வாகக்குழுவினர் அனைவரும் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்துடன், திட்டமிட்ட படி, இணையம் வழியாக இனிதே தொடங்கியது. தொடக்க நிகழ்வே இது வரை இப்படி எங்கும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை பார்த்திராத வகையில் இருந்தது. தமிழ்ச் சங்க இயக்குனர் திருமதி இலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் அருமையாக பாடியும், பொருளாளர் திரு.செந்தில் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பாடியதை காணொளியாக சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொடுத்திருந்தார். https://youtu.be/cIUQ74Zcawk?t=253

வாழ்த்துரை
ஒவ்வொரு ஆண்டும் நமது தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வலர்கள் பலர் தேனீக்கள் போல பல குழுக்களாகச் சுற்றிச் சுழன்று, பணிகளைச் செய்வார்கள். விழா நிகழ்வன்று ஒன்று கூடி, கலந்து கொண்டு பார்வையாளர்களுக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கும் சுவையுடன் கூடிய பொங்கல் உணவளிப்பார்கள். இம்முறை இணையம் வழியான விழா என்பதால் சொற்சுவையுடன் கூடிய இனிமையான பொங்கல் வாழ்த்துச் செய்தியுடன் தமிழ்ச் சங்க இயக்குனர் மருத்துவர் திரு.ஆறுமுகம் ஐயா மற்றும் திருமதி.இராணி செபாஸ்டின் அவர்கள் வாழ்த்துரையுடன் தொடங்கி வைத்தார். https://youtu.be/cIUQ74Zcawk?t=343

சிறப்பு நிகழ்ச்சிகள்
பெரியமேளம் - தொடர்ந்து நமது தமிழ்ச் சங்க விழாவில், தமிழர் இசைக்கருவிகளில் முதலான பறையிசை மேடையேறும் அவ்வகையில் தாள இசைக்கருவியில் இம்முறை தமிழ் நாட்டில் மிகப்பெரிய குழுவைத்திருக்கும் பெரியமேளம் திரு.முனுசாமி குழுவினரின் இசை முழக்கம் துள்ளல் இசையுடன் மிகச் சிறப்பாக இருந்தது. பெரியமேளம் இசைக்கருவிகள் குறித்தும், அடி முறைகள் குறித்தும், அடவுகளுடன் அடித்து ஆடியது வயலின் திறந்த வெளியில் கிராமியச் சுழலுடன், பெரிய மேள இசை நிகழ்வைப் பார்த்தது அனைவரும் இரசிக்கும்படி இருந்தது. இந்நிகழ்வினை பொருளாளர் திரு.செந்தில் கலியபெருமாள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார் https://youtu.be/-WeCJ7ZmX8I

தெருக்கூத்து - நமது தமிழ்ச் சங்கத்தில் சிலம்பின் கதை, பொன்னியின் செல்வன் போன்ற நாமே தயாரித்த தெருக்கூத்துகள், நமது சங்கமம் விழாவில் மேடையேற்றியிருக்கிறோம். இம்முறை இயக்குனர் திரு.சங்ககிரி ராஜ்குமார் குழுவினரின் "குமண வள்ளல்" தெருக்கூத்து மேடையேற்றப்பட்டது. நமது ஊரில் இரவு நேரத்தில் பளீர் ஒளியுடன், தெருக்கூத்து ஒப்பணைகளுடன், தனித்துவமான முகவீணை இசையுடன் பார்ப்பதைப் போன்று சிறப்பாக இருந்தது. கட்டியங்காரனின் நகைச்சுவையுடன், மினசோட்டாவின் குறிப்புகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு எடுத்துச் சென்ற பாங்கு, குமண வள்ளல், சகோதரர், அவரின் மனைவி, புலவர் பாத்திரம் என்று அனைவரும் மிக அருமையாகச் செய்திருந்தனர். தெருக்கூத்து இசை தனிச் சிறப்புடன் இருந்தது. இந்நிகழ்வினை சங்கத்தின் துணைத்தலைவர் திரு.சச்சிதானந்தன் சங்ககிரி ராஜ்குமார் அவர்களுடன் அருமையான நேர்காணலுடன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். https://youtu.be/i4vkJdP8q18

விழிப்புணர்வு நாடகம் - சிறப்பான கலைஞர்களின் நிகழ்வுகள் எத்தனை நடத்தினாலும், சங்கத்தின் குறிக்கோளாம் மினசோட்டா மக்களுக்கு வாய்ப்பளிக்க நமது திறமையை, கற்றுக்கொண்ட கலையை முன்னிறுத்த நாம் தவறியதில்லை. அவ்வகையில் மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நடித்த விழிப்புணர்வு நாடகம் - யாருப்பா மாறணும்? மேடையேற்றப்பட்டது. இதற்கு முன் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி மற்றும் திரு.ராஜு அவர்கள் எழுதிய ராசேந்திரச் சோழன் போன்ற வரலாற்று நாடகங்களை, முதல் முறையாக மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்களை வைத்து மேடையேற்றியது நமது தமிழ்ச் சங்கம். அந்த வரிசையில், மேடை நாடகத்தை, இந்த நோய் தொற்றுக் காலத்தில் ஒரு குறும் படம் வடிவிலேயே மாணவர்கள் பேசி நடித்து, நடனம் ஆடி, சிலம்பம், புலியாட்டம் போன்ற கலைகளை நிகழ்த்திய வகையில் அத்தனைச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. பலர் வெகுவாகப் பாராட்டினர். இந்த நாடகத்தின் எழுத்து, ஆக்கம் திரு சுந்தரமூர்த்தி, ஒருங்கிணைப்பு சரவணக்குமரன், தொழில்நுடப உதவி தமிழ்பள்ளி மாணவர் ராஜ் இசக்கிமுத்து, நடனம் - மகேஸ்வரி அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. https://youtu.be/G-KgfO18ZWE

கருத்தரங்கம் - கடந்த வருடம் 2020 முத்தமிழ் விழாவில் திரு. ஞானசம்பந்தம் தலைமையில் நாம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கு கொண்ட பேச்சாளர்கள், இம்முறை சங்கமம் பொங்கல் விழாவில் 'இயற்கை சார்ந்து வாழ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த ஆர்வம் தெரிவித்திருந்தனர். பங்கு பெற்ற பலர் ஒவ்வொருவரும் இயற்கையோடு ஒன்றிய தலைப்பில் மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். நமது தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகவும், நிர்வாகக் குழுவில் பணியாற்றிய திரு.மதுசூதனன் வெங்கடராஜன் அவர்கள் நடுவராக இருந்து மிகச் சிறப்பாக பங்கேற்பாளர்களின் கருத்துகளை ஆராய்ந்து தனது கருத்துகளையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்து வைத்தார். நமது மினசோட்டாவில் இயல் சார்ந்து ஒரு திறமை வாய்ந்த ஒரு குழு அமையப்பெற்றதில் சங்க நிர்வாகிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. https://youtu.be/4OAvF5nnGjA

மினசோட்டாக் கலைக்குழுவினரின் - பறையிசை, தவில், நாகசுவரம் மற்றும் குத்துவரிசை .
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மினசோட்டா மாநிலக் கலைக் குழு (MSAB) நிதியுதவியுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களை நமது மினசோட்டாவிற்கு வரவழைத்து இங்குள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்றுவித்து வருகிறோம். அவ்வாறு பயின்ற மினசோட்டாக் கலைக்குழுவினரில் 10 பேர் பங்கு கொண்ட பறையிசை முதல் முறையாக இணையம் வழியாக மேடையேற்றினோம். பயிற்றுனராக மினசோட்டா இயக்குனர் திரு.தமிழ்க்கதிர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். தவில் மற்றும் நாகசுரத்தை, கிராமியப் பாடலுடன் அழகாக ஒருங்கிணைத்திருந்தார் திரு.சரவணன் துரைராஜன். தமிழர் தற்காப்புக் கலையில் எந்த ஒரு பொருளும் இல்லாமல் நமது கையின் துணையுடன் நிகழ்த்தக் கூடிய குத்துவரிசையை நிர்வாக இயக்குனர் திரு.இராம் சின்னதுரை மற்றும் மணிகண்டன் மிகச் சிறப்பாக குழந்தைகளுடன் செய்து காட்டினர்.

பறையிசை-https://youtu.be/ok1GLGer8t4
தவில்,நாகசுவரம்-https://youtu.be/xBTUQgYQUek
குத்துவரிசை - https://youtu.be/0E37h3KfYYQ

மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மலரும் மொட்டும், சுட்டித்தனத்துடன் கொஞ்சிப்பேசும் அழகிலே, பல்வேறு வேடமிட்டு தங்களின் திறமையை, அதனூடே அழகாக காட்டிச் சென்ற, ஒரு அருமையான நிகழ்வு. இதனை நமது தமிழ்ப் பள்ளி மழலை ஆசிரியர்கள் அபிராமி நாகப்பன், சங்கீதா சரணவனக்குமரன், சோபியா ஜெயவீரன் அருமையாக ஒருங்கிணைத்திருந்தனர். பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி. https://youtu.be/2-cekKzmTe4

விருந்தினர்களின் வாழ்த்துச் செய்திகள்
கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் நமது மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் முழுவதும் "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். அந்த அறிவிப்பை அதிகார சபை அங்கத்தினரான(Senator) திரு.ஜான் காஃமென் நேரலையில் கலந்து கொண்டு வாசித்துக்காட்டி, நமது தமிழ்ச் சங்கத்தின் கலை சார்ந்த நிகழ்வுகளையும், தொடர் சாதனைகளையும் குறிப்பிட்டு வாழ்த்தினார். அடுத்த தலைமுறையினருக்கான குடிமை பொறுப்புகள் மற்றும் தமிழ் குமுகத்திற்கான அங்கீகாரம் எனும் முதன்மை நோக்கில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

எல்லைகள் கடந்த மொழி சார்ந்த இனக்குழுவாக தமிழுக்கென்று தனி அங்கீகாரத்தினை மினசோட்டாவில் வழங்கி சிறப்பித்து இருக்கிறது மினசோட்டாவின் பன்னாட்டு அமைப்பு (International Institute of Minnesota). இந்த தொடர்பையும், தமிழ்ச் சங்கத்தின் விழா பங்களிப்புகளையும், பயணத்தையும் பற்றி தனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் திருமதி கோரி எர்ட்ஸ் (Corinne Ertz - Development Director - International institute of Minnesota ) அவர்கள் வழங்கினார்.

மினசோட்டாத்தமிழ்ச்சங்கம் பத்துஆண்டுகளாக தமிழரின் நாட்டுப்புற மற்றும் மரபுக் கலைகளில்பல பணிகளை முன்னெடுத்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக கலைப் பயிலரங்கம் நடத்த, நிதி உதவி வழங்கி வருகிறது மினசோட்டா மாநில கலைக் குழுமம் (MSAB). நமது கலைப் பயணத்தையும், தொடர் பங்களிப்பையும் பற்றி தனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் திருமதி இரீனா ரோசி ( Rina Rossi - Program Officer - Minnesota State Arts Board ) அவர்கள் வழங்கினார். இந்த நேரலையை சங்கத்தின் தலைவர். திரு சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர் திரு.சச்சிதானந்தன், இயக்குனர் திருமதி.பிரியா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். விருந்தினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
https://youtu.be/cIUQ74Zcawk?t=1322
https://youtu.be/cIUQ74Zcawk?t=13311
https://youtu.be/cIUQ74Zcawk?t=19033

கடந்த 13 ஆண்டுகளில் நமது மினசோட்டாவிற்கு எண்ணற்ற கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் திருபுஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி, திரு.சீர்காழி சிவசிதம்பரம், பறையிசை மற்றும் நாட்டுப்புற நடனங்கள் - திரு.ஆனந்தன் மற்றும் திருமதி அருள்செல்வி ஆனந்தன், நாகசுரம் மற்றும் தவில் - மாம்பலம் திரு.இராமச்சந்திரன், திரு.சிலம்பரசன், பறையிசை - திரு.சக்தி, பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.சுமதிஸ்ரீ நமது தமிழ்ச் சங்கத்தின் மொழி மற்றும் கலை ஆர்வத்தினையும், செயல்பாடுகளையும் மினசோட்டா மாநில ஆளுநரின் பிரகடனத்தினையும் பாராட்டும் வகையில் வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.https://youtu.be/cIUQ74Zcawk?t=11434

தமிழ்ச் சங்க தலைவர் உரை - திரு.சுந்தரமூர்த்தி https://youtu.be/cIUQ74Zcawk?t=4311
தமிழ்ப்பள்ளி துணை இயக்குனர் உரை-திரு.கோபிகிருஷ்ணன் - https://youtu.be/cIUQ74Zcawk?t=22239

மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை குறித்த உரை - தமிழ்ச் சங்க இயக்குனர், மருத்துவர் திரு.ஆறுமுகம் https://youtu.be/cIUQ74Zcawk?t=12720

கலைநிகழ்ச்சிகள் மற்றும் நன்றியுரை
நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை இடைவிடாது இணையம் வழியாக, ஒளிபரப்பு செய்ய உதவிய மினசோட்டாத் தொழில் நுட்ப அணியில் பணியாற்றிய திரு செந்தில், திருமதி.பிரியா, திரு.இராம், திரு.செபஸ்ட்டின், திருமதி.இராணி செபஸ்ட்டின்,செல்வி.சௌமியா,திரு.சுந்தரமூர்த்தி, திரு.சச்சி, திரு.இராசன் அனைவருக்கும் மிக்க நன்றி. இறுதியாக நன்றியுரையை துணைச் செயலாளர் திரு.இராம் சின்னத்துரை வழங்கினார்.

நன்றியுடன் Thank You,
சுந்தரமூர்த்தி Sundaramoorthy
President Minnesota Tamil Sangam

மூலக்கதை