3வது முறையாக இன்று ரூ.25 உயர்வு: வீட்டு காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதம் ரூ.100 அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
3வது முறையாக இன்று ரூ.25 உயர்வு: வீட்டு காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதம் ரூ.100 அதிகரிப்பு

சேலம்: பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை தொடர்ந்து, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை இன்று திடீரென ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு மாதம் 3வது முறையாக விலையேற்றப்பட்டு ரூ. 100 அதிகரித்துள்ளதால் மக்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது.

இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டு வந்தது.

ஆனால் சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், நடப்பு மாதம் முதன்முறையாக இன்று 3வது தடவையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு மாதம் (பிப்ரவரி) கடந்த 4ம் தேதி விலையை அதிகரித்து எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14. 2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை ரூ. 25 அதிகரித் தனர்.

இதனால் சென்னையில் ரூ. 710க்கு விற்கப்பட்ட மானியமில்லா சிலிண்டர் ரூ. 25 அதிகரித்து ரூ. 735 ஆகவும், சேலத்தில் ரூ. 728ல் இருந்து ரூ. 753 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ. 719, கொல்கத்தாவில் ரூ. 745. 50 ஆக உயர்ந்தது.

2வது முறையாக கடந்த 15ம் தேதி காஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டது.

இதனால் சென்னையில் ரூ. 735க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ. 50 உயர்ந்து ரூ. 785 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சேலத்தில் ரூ. 753ல் இருந்து ரூ. 803 ஆக உயர்ந்தது.

இதுவே டெல்லி, மும்பையில் ரூ. 769 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 795. 50 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு மாதம் 3வது முறையாக இன்று (25ம் தேதி) காஸ் சிலிண்டர் விலை திடீரென ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் நேற்று வரை வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 785க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 25 உயர்ந்து ரூ. 810 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ. 803ல் இருந்து ரூ. 828 ஆக உயர்ந்தது.

இதுவே டெல்லி, மும்பையில் ரூ. 794 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 820. 50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடைக்கொண்ட வர்த்தக சிலிண்டர் விலையை இன்று ரூ. 5 குறைத்துள்ளனர்.

இம்மாதம் 1ம் தேதி ரூ. 191 அதிகரிக்கப்பட்ட நிலையில், 2 தடவையாக ரூ. 24 மட்டும் குறைத்திருக்கின்றனர். இதனால், அதன் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை நடப்பு மாதம் 4ம் தேதி ரூ. 25ம், 15ம் தேதி ரூ. 50ம், இன்று ரூ. 25ம் உயர்த்தப்பட்டதால், இம்மாத விலையேற்றம் என்பது ரூ. 100 ஆக உயர்ந்துள்ளது.

இது சாதாரண மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. ஏற்கனவே பெட் ரோல் விலை தினமும் 25 காசு முதல் 40 காசு வரையில் உயர்த்தப்படுவதால், அதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100ஐ எட்டிவிட்டது. தமிழகத்தில் ரூ. 94ஐ எட்டியிருக்கிறது.

டீசல் விலையும் வடமாநிலங்களில் ரூ. 90ஐயும், தமிழகத்தில் ரூ. 86ஐயும் கடந்துள்ளது. பெட்ரோல், டீசலை தொடர்ந்து காஸ் சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப் பட்டிருப்பது மக்கள் தலையில் விழுந்த பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து இன்னும் பொதுமக்கள் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்களின் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில், மக்களின் அன்றாட தேவையாக விளங்கும் காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலையும், கட்டமைப்பை மேற்கொள்ளும் பொருட்கள் விலையும் பல மடங்கு உயரும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

.

மூலக்கதை