9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகவும், 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு மே 7ம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘‘அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது அரசு பணியாளர், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், சங்கங்கள், ஆணையங்கள் உள்பட பொதுத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும். இந்த புதிய முறை 31. 5. 21ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’.

இதே போல் முதல்வர் எடப்பாடி வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,‘‘தற்போது தமிழகத்தில் தளர்வுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையால் தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

மற்ற மாணவர்கள் ஆன்லைன், தொலைக்காட்சி, இணையதளம் மூலமும் கல்வி பயின்ற வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்க்கொண்டும் வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2020-2021ம் கல்வியாண்டிற்காக 9 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொது தேர்வு எதுவுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள்” என்று அறிவித்தார்.

.

மூலக்கதை