இடைக்கால பட்ஜெட் தாக்கல்: தமிழக அரசின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இடைக்கால பட்ஜெட் தாக்கல்: தமிழக அரசின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்வு

சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4. 85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் 2021-2022ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

காலை 10. 30 மணியில் இருந்தே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர தொடங்கினர். கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ் 10. 48 மணிக்கு வந்தார்.

அவரிடம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நலம் விசாரித்தனர். காலை 10. 49 மணிக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சட்டசபைக்கு வந்தனர்.

ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட சூட்கேசில் பட்ஜெட் நகலுடன் ஓபிஎஸ் உள்ளே வந்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

சரியாக காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் பேரவைக்கு வந்ததும் திருக்குறள் படித்ததும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கையை படிக்க தொடங்கினார்.

அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டார். ஆனால், அவரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து சபாநாயகர் கூறும் போது, நீங்கள் பேசுவது இங்கு பதிவாகாது. நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லி விட்டு போங்கள என்று கூறினார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

தொடர்ந்து சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ்சை பட்ஜெட் படிக்கும் படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து காலை 11. 02 மணியளவில் பட்ஜெட்டை படிக்க தொடங்கினார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அதே நேரம் அதிமுக உறுப்பினர்கள், அமைச்சர் ஓபிஎஸ் படித்து கொண்டு இருந்த போது, மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து 3 நிமிடங்கள் குரல் எழுப்பியும் துரைமுருகன் பேச அனுமதி தராததால் துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் அபுபக்கர் வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பேசியதாவது:

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-22ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-23ம் நிதியாண்டில் 3. 5 சதவீதத்திற்குள்ளும், 2023-24ல் 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.

15வது நிதி குழுமத்தின் பரிந்துரையின் படி, நிலுவை கடன் தொகை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-22ம் நிதியாண்டில் 28. 7 சதவீதத்திற்குள்ளும், 2022-23ம் 29. 3 சதவீத்திற்குள்ளும், 2023-24ம் நிதியாண்டில் 29. 1 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
2020-21 இந்தியா பொருளாதாரம் நிலையான நிலையில் 7. 7 எதிர்மறை வளர்ச்சியுடன் தேக்க நிலை எதிர்நோக்கி உள்ளது.

இருப்பினும். இனி வரும் ஆண்டுகளில் இந்த தேக்க நிலை மறைந்து வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, 2022-23ம் ஆண்டில் 15. 5ம் சதவீதம், 2023-24ம் ஆண்டில் 15 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவி உட்பட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2020-21ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்து 700. 62 கோடியை காட்டிலும் 2021-22ம் ஆண்டில் வரவு செலவு திட்டமதிப்பீடுகளில் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 991. 96 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வருவாய் 2020-21 திருத்த மதிப்பீடுகளில் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 968. 97 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் 2020-21ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமதிப்பீட்டினை ஒப்பீடும் போது 23,561. 3 கோடி குறைவாகும்.

2021-22ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இது ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 641. 78 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவை வரி வசூலில் தமிழகம் ஓரளவு சிறப்பாக செயல்படுவதால் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவை தொகைகள் உரிய நேரத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22ம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தில் ரூ. 45 ஆயிரத்து 395. 50 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணங்கள் 2020-21ம் ஆண்டில் வரவு செலவு திட்டமதிப்பீடுகளை காட்டில் ரூ. 3654. 13 கோடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22ம் ஆண்டில் வரவு செலவு திட்டமதிப்பீட்டில் ரூ. 14879. 37 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டு மொத்த கடன் வரம்பு அடிப்படையில் 2021-22ம் ஆண்டிற்கான நிகர கடன் வரம்பு 85 ஆயிரத்து 454. 04 கோடி என கணக்கிடப்பட்டிருந்தாலும், மாநில அரசு ரூ. 84,686. 75 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 2021-22ம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகைக்கு மாறாக கடனாக பெறப்படும் ரூ. 7608. 38 கோடி நீங்கலாக ரூ. 5 லட்சத்து 70 ஆயிரத்து 189. 29 கோடியாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 29. 6 சதவீதம் ஆக இருக்கும்.

2020-21ம் ஆண்டில் ரூ. 65 ஆயிரத்து 994 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ரூ. 41 ஆயிரத்துக்கு 417. 30 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, தமிழக அரசின் கடன்சுமை 4. 85 லட்சம் கோடியாக உள்ளது.

அடுத்த ஒராண்டில் தமிழக அரசின் கடன்சுமை ரூ. 5. 7 லட்சம் கோடியாக அதிகரிக்கும். 2020-21ம் ஆண்டிற்கு ரூ. 84,666 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் மொத்த வருவாய் வரி ரூ. 1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடப்பட்டுள்ளது. ரூ. 41 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையாக உள்ளது.

இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

.

மூலக்கதை