வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

மீனம்பாக்கம்: கொரோனா வைரசின் 2வது அலை மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு இன்று காலையில் இருந்து கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பொதுமக்களை ஆட்டி படைத்து வருகிறது.

இதனால் கடந்தாண்டு ஜனவரி 22ம் தேதியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை நடந்தது. தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து மருத்துவ பரிசோதனையும் தளர்த்தப்பட்டது.

கடந்த அக்டோபரில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால், அவர்களுக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கிடையாது என்ற விதிமுறையை சுகாதார துறையினர் அமல்படுத்தினர். இதனால் வெளிநாட்டு பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனையின்றி, சான்றிதழை காட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகளவில் உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை சான்றிதழில் போலி சான்றிதழ்களும் வருவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை முதல், வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கொரோனா வைரஸ் மருத்துவ சான்றிதழை காட்டிவிட்டு செல்லலாம்.

தவிர துபாய், சார்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், வியட்நாம், இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த நாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கட்டாயமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.

அதற்காக ரூ. 1,200, ரூ. 2,500 என்று 2 விதமான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1,200 கட்டண பரிசோதனை செய்தால் முடிவு 6 மணியில் இருந்து 8 மணி நேரத்திற்குள் கிடைக்கும். ரூ. 2,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும்.

இந்த முடிவு வரும் வரை சுகாதார துறையினரின் கண்காணிப்பில் பயணிகள் இருப்பார்கள். பாசிட்டிவ் ரிசல்ட் வரும் பயணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விமான பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை