புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது: ஓரிருநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது: ஓரிருநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் அடுத்தடுத்து விலகியதால் பெரும்பான்மை இழந்தததாக எதிர்க்கட்சிகள் பிரச்னை கிளப்பின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

இதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் தலா 11 பேர் இருந்தனர்.

3 நியமன எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் விவகாரம் தொடர்பாக அரசு கொறடா அவையில் பிரச்னை எழுப்பினார்.

இதற்கு நியமன எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, நாராயணசாமி உள்ளிட்ட அவையில் இருந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் வி. பி. சிவக்கொழுந்து வாக்கெடுப்பு நடத்தாமலேயே அதிரடியாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுங்கட்சி தரப்பு ராஜ்நிவாஸ் சென்றது. அங்கு முதல்வர் தனது அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் அளித்தார்.

இதன்மூலம் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. 2 வாரமாக புதுவையில் நீடித்த பரபரப்பு அடங்கியுள்ளது.

இதனிடையே எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உதவியுடன் ஆட்சி அமைக்க இதுவரை உரிமை கோரவில்லை. இதற்கிடையே நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது குறித்து சபாநாயகரிடம் அறிக்கை பெறுவது, அமைச்சரவை ராஜினாமாவை ஏற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது, அனைத்து விபரங்களையும் தொகுத்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற பணிகளில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால் அன்றுமுதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

இதனால் ஆட்சி அமைந்தாலும் புதிய நலத்திட்ட உதவிகளை அறிவிக்க முடியாது. எனவே அதிகாரம் இல்லாத காபந்து அரசு போலவே செயல்பட முடியும் என்பதால் ஆட்சி அமைக்க ரங்கசாமி ஆர்வம் காட்டவில்லை.

மேலும் இச்செயல் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.

எனவே புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஜனாதிபதி ஆட்சி அமலாகும்பட்சத்தில் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை முழுமையாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக கவனிப்பார்.

சட்டசபை தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கும்வரை இந்தநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

.

மூலக்கதை