கலகலக்கும் டிஆர்., ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கம்

தினமலர்  தினமலர்
கலகலக்கும் டிஆர்., ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கம்

தமிழ்த் திரையுலகத்தின் முக்கிய சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் மற்றொரு அணியும் இணைந்து போட்டியிட்டன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் டிராஜேந்தர் உள்ளிட்ட சிலர் அவரது அணி சார்பில் தோல்வியடைந்தனர். அதன்பின் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக டி ஆர் புகார் கூறி போட்டியாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்தார்.

அவரே தலைவராகவும் செயல்பட ஆரம்பித்தார். ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கும் டி ராஜேந்தர் அந்த சங்கத்தின் விதிப்படி ஒரே சமயத்தில் இரண்டு சங்கங்களில் தலைவராக இருக்க முடியாது என்ற காரணத்தால் அவர் ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கடுத்து அவரது மனைவி உஷா ராஜேந்தர் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அந்த சங்கத்தின் இணைச் செயலாளராக பதவி வகித்த அசோக் சாம்ராஜ் பதவியிலிருந்து விலகினார். அடுத்து செயலாளராகப் பதவி வகித்த சுபாஷ் சந்திர போஸ் விலகினார். மேலும், பொருளாளர் பதவி வகித்த கே.ராஜன், மற்றொரு இணைச் செயலாளர் கேஜி பாண்டியன் ஆகியோரும் விலகி விட்டார்களாம்.

சங்கம் ஆரம்பிக்கும் போது உடனிருந்து முக்கிய பதவிகளில் பொறுப்பையும் ஏற்ற சில முக்கிய தயாரிப்பாளர்கள் டி ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அடுத்தடுத்து விலக ஆரம்பித்ததை அடுத்து அந்த சங்கம் கலகலக்க ஆரம்பித்துவிட்டது. எஞ்சியுள்ள சிலரும் தொடர்ந்து நீடிப்பார்களா அல்லது தாய் சங்கத்தில் மீண்டும் சேருவார்களா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

மூலக்கதை