நாடு முழுவதும் 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று தொடக்கம்..!!

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று தொடக்கம்..!!

டெல்லி: நாடு முழுவதும் 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்ட் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வான ஜேஇஇ மெயின் 2021ம் ஆண்டுக்கான தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 முறை கணினி வழியில் நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது 4 முறை தேர்வை எழுதிக் கொள்ளலாம். அதில், எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கிறதோ, அது கணக்கில் கொள்ளப்படும். முதற்கட்டமாக கட்டடவியலுக்கான இளங்கலை படிப்பும், வடிவமைப்புக்கான இளங்கலை படிப்பிற்கான தேர்வும் இன்று முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்காக தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்வுக்கான நுழைவு சீட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கொரோனா பாதிப்புகள் குறித்த சுய உறுதிமொழி குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

மூலக்கதை