தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ‘ஐநாக்ஸ்’ நிறுவனம் அமைக்கிறது

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ‘ஐநாக்ஸ்’ நிறுவனம் அமைக்கிறது

புதுடில்லி : ‘ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ்’ நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ ஆக்சிஜன் தொழிற்சாலைகளை அமைப்பது உட்பட, பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான திரவ வாயுக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ வடிவிலான ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கன் வாயுக்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அத்துடன், இத் தொழிற்சாலைகளில், வாயு பிரிப்பு பிரிவுகளையும் அமைக்க உள்ளது.இது குறித்து, ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர், சித்தார்த் ஜெயின் கூறியதாவது:நிறுவனம், தற்போது தினமும், 2,300 டன் திரவ வாயுக்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

இது, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அமையும் தொழிற்சாலைகள் மூலம், 4,800 டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம், இம்மாநிலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவர்.அடுத்த இரு ஆண்டுகளில் உற்பத்தி துவங்கி விடும். இதன் மூலம், மின்னணு, மருந்து, உருக்கு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான வாயுக்கள் தடையின்றி கிடைக்கும்.

மூலக்கதை