அமெரிக்காவில் 5 லட்சம் உயிர்களை பறித்து சென்ற கொரோனா கொல்லுயிரி!: பலியானோருக்கு பைடன், கமலா மவுன அஞ்சலி..!!

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் 5 லட்சம் உயிர்களை பறித்து சென்ற கொரோனா கொல்லுயிரி!: பலியானோருக்கு பைடன், கமலா மவுன அஞ்சலி..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டு தீயாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கொல்லுயிரியின் தீவிர பரவலால் அமெரிக்காவின் 50 மாநிலங்களும் சிக்கி தவித்து வருகின்றன. அங்கு ஒரேநாளில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1300 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5,12,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மக்களுக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் மெழுகுவர்த்திகள் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், உலக போர்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட கொரோனா அதிகளவில் உயிர்களை பறித்து சென்றுள்ளதாக கூறினார். மேலும், நாம் உண்மையிலேயே கடுமையான இதயத்தை உடைக்கும் மைல்கல்லை எட்டி இருக்கின்றோம். இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளனர். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றை காட்டிலும் இந்த ஒரு வருடத்தில் உயிரிழந்துள்ள அமெரிக்கர்கள் அதிகம் என குறிப்பிட்டார். அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 88 லட்சத்து 24 ஆயிரத்து 131 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றனர். அதிபராக பதவியேற்றதும் 100 நாள் கொரோனா தடுப்பு செயல் திட்டத்தை வகுத்து போர் கால அடிப்படையில் தடுப்பூசிகளை கிடைக்க பைடன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இருப்பினும் அமெரிக்காவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று 50 ஆயிரத்திற்கும் குறையாமல் இருந்து வருகிறது.

மூலக்கதை