நால்வரில் ‘நல்லவர்’ யார்... * வருவாரா வாஷிங்டன் சுந்தர் | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
நால்வரில் ‘நல்லவர்’ யார்... * வருவாரா வாஷிங்டன் சுந்தர் | பெப்ரவரி 22, 2021

ஆமதாபாத்: உலகின் பெரிய ஆமதாபாத் மைதானத்தில் நாளை பகலிரவு டெஸ்ட் துவங்குகிறது. இந்திய பவுலிங் கூட்டணியில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஒரு இடத்துக்கு நால்வர் போட்டியிடுகின்றனர். இதில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்றன. மூன்றாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக நாளை ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் துவங்குகிறது.

ஐந்து பேட்ஸ்மேன்கள்

இதற்கான இந்திய அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் இடம் பெறுவது உறுதி. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி அணிக்கு துவக்கம் தரவுள்ளது. ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, கேப்டன் கோஹ்லி, ரகானே பேட்டிங்கில் கைகொடுப்பர். அடுத்து விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட் இடம் பிடிப்பார். 

கூட்டணி எப்படி

பொதுவாக பகலிரவு டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவர். இந்தியாவில் மாலை நேரத்தில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதை எப்படிச் சமாளிப்பது என இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.

கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன், இஷாந்த் சர்மா, சுழலில் அஷ்வின், அக்சர் படேல் கூட்டணி உறுதி. 11வது வீரர் யார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்த ஒரு இடத்துக்கு முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் என நான்கு வீரர்கள் போட்டியிடுகின்றனர். ஆமதாபாத்துக்கு ஆடுகளத்திற்கு நல்லவர் யாரோ அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

குல்தீப் நம்பிக்கை

சென்னையில் 12.2 ஓவர்கள் தான் வீசினார் குல்தீப் யாதவ். பேட்டிங்கில் பெரியளவு இவரிடம் எதிர்பார்க்க முடியாது. இந்திய மண்ணில் பகலிரவு டெஸ்டில், மணிக்கட்டை சுழற்சி வீசும் பவுலர்களை எதிர்கொள்வது கடினம்.இது குல்தீப்புக்கு வாய்ப்பை தரலாம். 

பாண்ட்யா இடம்

ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டால் மூன்று வேகங்கள் இடம் பெறுவர். இதனால் பும்ரா, இஷாந்துடன் முகமது சிராஜுக்கு இடம் தரலாம். ஐந்தாவது பவுலர் தேவை என்றால், ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்கலாம். இரண்டரை ஆண்டுக்குப் பின் இவர், ஆமதாபாத் டெஸ்டில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

 வாஷிங்டன் எப்படி

சென்னையில் ‘பிங்க்’ பந்தில் அதிகநேரம் பயிற்சியில் ஈடுபட்டார் வாஷிங்டன் சுந்தர். தவிர ஆமதாபாத்தில் சமீபத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி தொடரில் சுழல் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆடுகளமும் சென்னை போல இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா. இந்த சூழலில் வாஷிங்டன் சேர்க்கப்படலாம். இவர் பேட்டிங்கிலும் கைகொடுப்பார்.  

 

தேறினார் உமேஷ் 

ஆஸ்திரேலிய தொடரில் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், உடற்தகுதியை நிரூபித்ததை அடுத்து, இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இவர் இப்போது தான் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இதனால் ஆமதாபாத் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம். 

 

ஆண்டர்சன் ஆருடம்

ஆமதாபாத் ஆடுகளத்தில் புற்கள் காணப்படுவதால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கலாம். இருப்பினும் சேப்பாக்கம் போல சுழலுக்கு ஏற்றதாக மாற்றப்படும் என இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் கணித்தார். 

இவர் கூறுகையில்,‘‘போட்டிக்காக களமிறங்கும் போது ஆடுகளத்தின் மீது உள்ள புற்கள் அகற்றப்படும் என உறுதியாக நம்புகிறேன். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பந்துகளை ‘ஸ்விங்’ செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். பயிற்சியில் ‘எஸ்ஜி’ வகை பந்துகள் ‘ஸ்விங்’ ஆகின. இந்தியாவில் ‘பிங்க்’ நிற பந்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட்(ஆமதாபாத் போட்டி) என்பதால், பந்தின் தன்மை பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

சுழற்சி முறையில் வாய்ப்பு அளிப்பது குறித்து வீணாக விமர்சிக்கின்றனர். இங்கிலாந்து அணி இந்த ஆண்டு 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், முன்னணி வீரர்களுக்கு ‘ரெஸ்ட்’ கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடந்த போட்டியில் எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இது, ஆமதாபாத் போட்டியில் உற்சாகமாக செயல்பட உதவும். அணிக்கு அனுபவ வீரர்கள் அவசியம் என்றால், ஸ்டூவர்ட் பிராட்டிற்கும் வாய்ப்பு தரப்படும். அவருடன் இணைந்து பந்துவீச தயாராக உள்ளேன்,’’என்றார்.

 

இஷாந்த் நம்பிக்கை

டெஸ்ட் அரங்கில் நாளை தனது 100 வது போட்டியில் களமிறங்குகிறார் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. அவர் கூறுகையில்,‘‘எனது 100வது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இருக்க வேண்டும் என விரும்பினேன். துரதிருஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால், சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க முடியவில்லை. இப்போதைய நிலையில் ஆமதாபாத் டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும். இதில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பைனலுக்கு முன்னேற முயற்சிக்கலாம். ஒருவேளை பைனலுக்கு சென்று, அதில் சாதித்தால், அது உலக கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தியதைப் போன்ற உணர்வைத் தரும்,’’ என்றார்.

 

வீரர்களுக்கு சிரமம்

இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில்,‘‘ஆமதபாத் மைதானத்தில் உள்ள இருக்கையின் நிறம், ‘பிங்க்’ (இளஞ்சிகப்பு) நிற பந்துடன் ஒத்திருப்பதால், பீல்டர்கள் பந்தை கணிப்பதில் சிரமம் ஏற்படும்,’’ என்றார்.

மூலக்கதை